குழந்தைகளுக்கான இசை அமைத்த வி.வி.சடகோபன்!

- வாமனன் - திரை இசை வரலாற்று ஆய்வாளர் -
25th Dec, 2014

உணர்ச்சி ததும்பும் இனிய குரல் கொண்ட, வி.வி.சடகோபன், தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முதன் முறையாக, மேல்நாடு சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர். முறையாக இசை பயின்ற பட்டதாரி வித்வான். நான்கு படங்களில், முக்கிய வேடங்களில் நடித்தவர்

வி.வி.சடகோபன்
நடிகர், கச்சேரி பாடகர், பல்கலைக்கழகங்களில் இசைப் பேராசிரியர், இசை கற்பித்தலுக்கு புதிய அணுகுமுறை கண்டுபிடித்து, அதைப் பரப்புவதற்காக, 'தியாக பாரதி' என்ற இயக்கம் கண்டவர் என்று, அவருடைய ஆளுமை விரிந்துகொண்டே போனது. இன்று பள்ளிக் கரணையில், ஒரு ஆலயத்தில், குருநாதர் என்ற முறையில் அவருக்கு சன்னிதி உள்ளது.
திருநெல்வேலி, வீரவநல்லுார் வேதாந்தம் சடகோபன், 1915, ஜனவரி, 29ல் பிறந்தார். இருபது வயதைத் தாண்டிய இளம் வித்வான் சடகோபனுக்கு, 'நவயுவன் அல்லது கீதாசாரம்' என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க அழைப்பு வந்தது. கே.பி.சுந்தராம்பாளுக்கு லட்சம் ரூபாய் கொடுத்த அசன்தாஸ், சடகோபனை வைத்து லண்டனில் படப்பிடிப்பு நடத்தினார். இயக்குனர், மைக்கேல் ஓமலேவ்.
மாபெரும் கவிஞர் ச.து.சு.யோகியார், சடகோபனை வைத்து, 'அதிருஷ்டம்' எடுத்தார்
(1939). 'வருவாளோ மாட்டாளோ' என்ற படத்தில், சடகோபன் பாடிய அழகான காதல் பாடல், இன்றும் ஒலித்துக் கொண்டு
இருக்கிறது. முருகதாசாவின் இயக்கத்தில், 'வேணுகானம்' படத்தில் நடித்தார் சடகோபன் (1941). சடகோபனின் இசை பலத்தை, படம் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது. ஜெமினி ஸ்டூடியோ உருவாகி, முதலில் தயாரான, 'மதனகாமராஜன்' படத்தில், தலைமை வேடம் ஏற்றார், சடகோபன்.
அவர் நடித்த நான்கு படங்களில், இதற்கான படப்பிரதி மட்டுமே எஞ்சி உள்ளது. படம் வெற்றி அடைந்தாலும், திரைப் படலத்திற்கு சடகோபன் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். கச்சேரி மேடைகளில், சிறந்த கலைஞராக முன்னுக்கு வந்தார். முன்னணி வித்வான்கள் அவருக்குப் பக்கவாத்தியம் வாசித்தனர். முன்னணிக்கு வந்து கொண்டிருந்தபோது, இசைப் பேராசிரியர் பதவி ஏற்றார்.
மதுரை காந்தி கிராமத்தில், இசைக் கல்வி இயக்குனராக இருந்தார். பிறகு, டில்லி பல்கலைக்கழகத்தில், இசைப் பேராசிரியராகப் பணியாற்றினார். நவீன கல்வி முறைகளை, பண்டைய குருகுல முறைகளுடன் இணைக்க முயன்றார் சடகோபன்.
இசை கற்பித்தலை குறித்து தீவிரமாகச் சிந்தித்து, கல்வி முறையில் அதை இணைக்கும் வழிவகைகளை ஆராய்ந்து வந்தார். குழந்தைகள், ஆடிப்பாடி இசை கற்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாடல்கள் புனைந்து, இசை அமைத்து, அவற்றை குழந்தைகளுடன் குழந்தையாகப் பாடியும் வந்தார்.
இந்த லட்சிய உணர்வுடன், அவர் பாரத நாட்டைச் சுற்றி வந்தார். உலகத்தின் பல நாடுகளில் பேசினார், பாடினார். அவருடைய ஊக்கத்தையும், உற்சாகத்தையும் கண்டு, அயல்நாட்டு இசைப் பேராசிரியர்கள் வியந்தனர். இந்த நிலையில், ஏப்ரல் 1980ல், ஒரு நாள், சடகோபன் மாயமாக மறைந்தார்.
இமயத்தில் அவரைப் பார்த்ததாக சிலர் கூறினர். சீடர் ஸ்ரீராம பாரதி, அவருடைய பணிகளை சிறப்பாக தொடர்ந்தார். ஸ்ரீராமபாரதிக்குப் பின், அவர் மனைவி சவுபாக்கியலட்சுமி, சடகோபனின் இயக்கத்தை முன்னடத்திச் செல்கிறார். 'கண்ணன் முகம் தோன்றுதடி, ஆதாரம் நீ தான் என்றறிந்தேன், நடமாடித் திரிந்த உமக்கு, பார்த்த சாரதி நன்னு பாலம்பாராதா, எந்த வேடுகொ' தலிய இசைத்தட்டுகள், சடகோபனின் சங்கீத மேன்மைகளை நினைவுறுத்திக் கொண்டிருக்கின்றன.
அவருடைய வழித்தோன்றல்கள், குழந்தைகளுக்கான அவருடைய இசைப்பாடல்களை, குறுந்தகடுகளாக கொண்டு வந்திருக்கின்றனர்.

Comments