திரை பாடல்களிலும் மின்னிய எம்.எல்.வசந்தகுமாரி

- வாமனன் - திரை இசை வரலாற்று ஆய்வாளர் -
26th Dec, 2014

கச்சேரி மேடை, திரைப்பாட்டு ஆகிய இரண்டிலும் முன்னணியில் நின்ற வெகு சிலரில் முக்கியமானவர், எம்.எல்.வி., என்று அழைக்கப் பட்ட, எம்.எல்.வசந்தகுமாரி. ஐம்பதுகளில், தமிழ்த்திரை இசையில் கர்நாடக சங்கீதம் கணிசமான அளவு ஒலித்தபோது செயல்பட்டவர் என்றாலும், மெல்லிசையிலும் அவருடைய ரம்மியமான குரல் பரிமளித்தது.

எம்.எல்.வசந்தகுமாரி
கர்நாடக சங்கீத நிபுணரான கூத்தனூர் அய்யாசாமி அய்யருக்கும், இசைப் பாரம்பரியத்தில் வந்த லலிதாங்கிக்கும், ஜூலை 3, 1928ல், சென்னையில் பிறந்தவர் வசந்தகுமாரி. இரண்டு வயது குழந்தையாக இருக்கும்போதே, பாடல்களின் ஸ்வரங்களை சொல்ல ஆரம்பித்து விட்டாராம். ஆனால், இசை மீது எல்லையில்லாத நாட்டமுள்ள பெற்றோர், இசையில் இயற்கையாக ஞானமுள்ள தங்கள் ஒரே மகள், பெரிய பாடகியாக வேண்டும் என்பதை விட, நன்றாகப் படிக்க வேண்டும் என்று நினைத்தனர். வசந்தியும் டாக்டராக வேண்டும் என்று படித்தார். எப்படியும், இசை அவரை நிழல்போல் தொடர்ந்தது.
பதினோரு வயதில், லலிதாங்கியின் கச்சேரிகளில், வசந்தகுமாரி பின்பாட்டு பாடத் துவங்கினார். பின்னிரெண்டு வயதில், பிரபல பாடகர் ஜி.என்.பாலசுப்ரமணியம், அவரை தன் மாணவியாக வரித்துக் கொண்டார். பதிமூன்று வயதில், வசந்தகுமாரி பாடிய முதல் இசைத்தட்டு வெளிவந்தது; முதல் தனிச் கச்சேரியும் நடந்தது.
பதினைந்து வயதில் படிப்பை விட்டு, குடும்ப பொறுப்பை ஏற்க வேண்டிய நிலை வந்தது. கச்சேரி வாய்ப்புகளை ஜி.என்.பி., ஏற்படுத்திக் கொடுத்தார். வசந்தகுமாரியின் குரலால் கவரப் பட்டு, முதல் திரை வாய்ப்பைத் தந்தவர், எம்.கே.தியாகராஜ பாகவதர். 'ராஜமுக்தி' என்ற சொந்தப் படத்தில் (1948), பாகவதரின் மனைவி வேடத்தில் நடித்த வி.என்.ஜானகிக்கு பின்னணி பாடினார் வசந்தகுமாரி. பாகவதருடன் வசந்தகுமாரி இரண்டு பாடல்கள் பாடினார். ராஜமுக்தியின் இசை அமைப்பாளர், திரை இசை மேதை சி.ஆர்.சுப்பராமன். வசந்தகுமாரியின் குரலில் வேறு பல வெற்றிப் பாடல்களைத் தந்தார்.
அவை, எம்.எல்.வி., பி லீலாவுடன் பாடிய, 'எல்லாம் இன்ப மயம், சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா' (மணமகள் 1951). கவர்ச்சிகரமான ராகமாலிகையாக அமைந்த சின்னஞ்சிறுகிளியே, கர்நாடக இசையால் சுவீகரிக்கப்பட்ட திரைப்பாடல். இசை அமைப்பாளர் ஜி.ராமநாதன் திரை உலகில் கோலோச்சிய காலத்தில், ஏராளமான நடனப்பாடல்களை அவருடைய இசையில் பாடினார் எம்.எல்.வி., ஆடல் காணீரோ, திருவிளையாடல் காணீரோ (மதுரை வீரன்), பாற்கடல் அலைமேலே (தசாவதாரப் பாடல் - ராஜா தேசிங்கு) ஆகியவை இந்தத் தலைப்பில் மின்னும் உருப்படிகள்.
விஸ்வநாதன் ராமமூர்த்தி லதாங்கி ராகத்தில் அமைத்த, 'ஆடாத மனமும் உண்டோ' - இன்னொரு அழகான பாடல் - 'ஜிலுஜிலுவென்று' வசந்தகுமாரியின் குரலில் வந்து விழும் பிருகாக்களை நான் ரசிப்பேன் என்பார், இந்தப் பாடலை அவருடன் இசைத்த டி.எம்.சவுந்தரராஜன். ஐம்பதிற்கும் மேற்பட்ட இத்தகைய பாடல்கள், இன்றைய நடன நிகழ்ச்சிகளுக்கு ஏற்புடையவை. ராகங்களில் அமைந்த மென் கர்நாடகப் பாடல்கள் என்றாலும், (மஞ்சள் வெயில் மாலையிலே), மெல்லிசைப் பாடல் என்றாலும் (கொஞ்சும் புறாவே, சூவாமல் கூவும் கோமளம்), வசந்தகுமாரி அவற்றை இனிமையாகப் பாடினார். அறுபதுகளில் அவருடைய முழு கவனம், கச்சேரி மேடைக்குத் திரும்பியது. 'ஹம்ஸ கீதே' என்ற கன்னடப் படத்தில், 1975ல் பாடினார்.
பின்னாளிலும் அவருடைய லைட் கிளாசிகல் பாடல்கள், அற்புதமாக அமைந்தன. அவர் வழங்கிய தமிழ் தாலாட்டுப் பாடல்கள் மிக இனிமையானவை. திருப்பாவை, திருவெம்பாவை போன்ற சமய இலக்கியங்களையும் இசைத்தட்டுகளில் மிக நேர்த்தியாகப் பதிவு செய்தார். இப்படி எல்லாம் பாடியவர், தன்னுடைய சொந்த வாழ்க்கையை, 'ஒரு டிராஜெடி' என்பார். நாம் அதை, 'ஒரு மெலடி' என்போம்.

Comments