திரை இசையில் ராகநாதனாக திகழ்ந்த ஜி.ராமநாதன்!

- வாமனன் - திரை இசை வரலாற்று ஆய்வாளர் -
28th Dec, 2014

இந்திப் பட மெட்டுகளைப் பயன்படுத்தினால் தான், திரைப்பாடல்கள், வெற்றி பெற முடியும் என்ற மயக்கம் இருந்த காலகட்டத்தில், தென்னாட்டு ராகங்களைக் கொண்டு மக்களைக் கவர்ந்திழுத்தவர், இசை மேதை ஜி.ராமநாதன்.

ஜி.ராமநாதன்
'வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன்' ஆகிய சிரஞ்சீவிப் படங்களுக்கு ஜீவனுள்ள, பாரம்பரிய இசை அமைத்தார். 'கட்டபொம்மன்' படத்தின் இசைக்காக, எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்த, 'ஆப்ரோ' ஆசிய பட விழாவில், சிறந்த இசை அமைப்பாளருக்கான விருது பெற்றார்.
தமிழ்த் திரைப் பாட்டில், நல்ல தமிழ் உச்சரிப்புக்காகப் பெயர் பெற்ற டி.எம்.சவுந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன் போன்றோரை, சிறந்த பின்னணிப் பாடகர்களாக செதுக்கியவர், ராமநாதன். எஸ்.வரலட்சுமி, எம்.எல்.வசந்த குமாரி, ஜிக்கி, பி.லீலா முதலிய பின்னணிப் பாடகிகள், அவரது பாடல்களை மரியாதையுடன் செவிமடுத்து, அவற்றின் நுட்பங்களை கிரகித்துப் பாடினர்.
'மன்மத லீலையை வென்றார் உண்டோ' பாடலை, சாருகேசி ராகத்தில் அற்புதமாக அமைத்ததற்காக, கர்நாடக வித்வான்களின் பாராட்டைப் பெற்றார்.
ஹரிகதை செய்த தனது தமையன், ஜி.சுந்தர பாகவதருக்கு பின்பாட்டுப் பாடுபவராக கலை உலகிற்கு அறிமுகம் ஆனார் ஜி.ராமநாதன். வருவாயைப் பெருக்கிக் கொள்ளவும், தனது கலை ஆர்வம் காரணமாகவும், மேடை நாடகங்களில், ஆர்மோனியம் வாசித்து, பின்பாட்டும் பாடி வந்தார். ஆர்மோனியக் கட்டைகளில், அவரது விரல்கள் செய்த வேகமான நடனத்தை கண்டு, பலர் வியந்தனர். ராஜபார்ட் நடிகருக்கும் ராமநாதனுக்கும் இசையில் நடந்த போட்டா போட்டியை விளம்பரம் செய்து, நாடக ஒப்பந்ததாரர்கள், லாபம் அடைந்தனர். தமிழில் பேசும் படம் வந்த பின், தியாகராஜ பாகவதரின் 'சத்தியசீலன்' (1936) உட்பட, சில படங்களில் ஆர்மோனியக் கலைஞராக
ராமநாதன் பங்கேற்றார்.
பின், 'பரசுராமர், உத்தமபுத்திரன்' (1940) முதலிய படங்களில், இசை அமைப்பாளர் ஆக உயர்ந்தார். 'சிவகவி'யில், பாகவதருக்கான பல வெற்றிப் பாடல்களை - எடுத்துக்காட்டாக, சிந்து பைரவியில், 'வதனமே சந்திர பிம்பமோ'- உருவாக்கினார். பி.யு.சின்னப்பாவிற்காக, 'ரத்ன குமாரி'யில், ராமநாதன் செஞ்சுருட்டியில் அமைத்த, 'கேலி மிகச் செய்வாள்' (பாரதியின், 'கண்ணன் என் சேவகன்' பாட்டின் அடிப்படையில் புனையப்பட்ட வரிகள்), பேரெழில் வாய்ந்தது.
தான், சின்னப்பாவிற்காக, 1949ல் அமைத்த மெட்டை, ரசிகர்களின் விருப்பத் தேர்வாக, 1955ல் மாதுரி தேவி, ராஜசுலோசனா, நம்பியார் நடித்த, 'நல்ல தங்கை' என்ற படத்தில், தானே பாடினார், ராமநாதன். அவரது குரல் இனிமையையும், அதில் சங்கதிகள் பேசும் அழகையும், திரையில் வந்த சில பாடங்கள் நிரூபிக்கின்றன. அவரே திரையில் தோன்றி, 'நல்லதை சொல்லிடுவேன்' என்று ராகமாலிகையாக பாடும் பாடலை, 'ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி'யில் காணலாம்.
'பொன்முடி' படத்தில், கதாநாயகன் நரசிம்ம பாரதிக்காக, அவர் இசைத்த பாடல்களில், ராக பாவமும் உணர்ச்சிப் பெருக்கும் உள்ளன. கே.வி.மகாதேவன் இசை அமைப்பில், வகுளாபரணம் ராகத்தில் ராமநாதன் பாடிய, 'எஜமான் பெற்ற செல்வமே' நெஞ்சை உருக்கவல்லது.
வெற்றிப்படமான மந்திரி குமாரி யில், 'வாராய் நீ வாராய்' என்று, உச்சகட்ட காட்சிக்கு முன்னோட்டமாக, 'பீம்பிளாஸ்' ராகத்தில் அவர் அமைத்த மெட்டும், அதில் இட்ட சங்கதிகளும், இன்றும் ரசிகர்களை மயக்குகின்றன. 'சுந்தரி சவுந்தரி (குறிஞ்சி), சிந்தனை செய் மனமே (கல்யாணி), வசந்த முல்லை (சாருகேசி), முல்லை மலர் மேலே (கானடா)' பாடல்கள் எல்லாம், ராமநாதன் பின்னிய ராகவலையில் ஒரு இழை தான். ராகங்கள் உள்ள வரை, ராகநாதனாக விளங்கும் ராமநாதனின் பாடல்கள், வலம் வந்து கொண்டே இருக்கும்.

Comments