700க்கும் மேற்பட்ட பாடல்கள் புனைந்த கல்யாணி வரதராஜன்!

- லலிதாராம் - எழுத்தாளர் -
30th Dec, 2014

'அபர்ணா பார்வதி' என்று டி.ஆர்.சுப்ரமணியத்தின் கணீர் குரலில் நளினகாந்தி அலையடித்துக் கொண்டுஇருந்தது. நிறைய கேட்கக் கிடைக்கும் ராகம் என்றாலும், இந்தப் பாடலில் விவரிக்க முடியாத, ஒரு புத்துணர்வு நிரம்பி வழிந்தது.

யார் புனைந்த பாடலிது? கற்பனைக்குப் பெயர்போன டி.ஆர்.சுப்ரமணியத்தின் மற்றுமொரு அற்புத வெளிப்பாடோ என்று எண்ணிக் குழம்புகையில், ''இந்தப் பாடல், கல்யாணி வரதராஜனுடையது,'' என்று அறிவித்தார். அப்போதுதான் அந்தப் பெயர் முதன் முதலில்
என் காதில் ஒலித்தது. பின்னர் ஒருமுறை அவரிடம், இதுகுறித்து கேட்கையில், ''ஆந்திரத்தில் வளர்ந்த தமிழ்ப் பெண்மணி. அவர் பம்பாயில் புனைந்த சமஸ்கிருதப் பாடலைத் தான் அன்று பாடினேன். தானுண்டு தன் இசை உண்டு என்று வெளியில் தெரியாத எத்தனையோ ரத்தினங்களில் இவரும் ஒருவர்,'' என்றார்.
பம்பாயில் வானொலி நிலையத்தில் பணிபுரிந்து வந்த, கல்யாணி வரதராஜன் வாய்ப்பாட்டு, வயலின், வீணை மூன்றிலும் தேர்ந்து விளங்கினார். பம்பாய்க்கு கச்சேரி செய்ய சென்ற, எஸ்.கல்யாணராமன், எஸ்.ராஜம், டி.ஆர்.சுப்ரமணியம் போன்ற மேதைகள், இவரைத் தேடிச் சென்று, இவர் பாடல்களைக் கற்று கச்சேரிகளில் பரப்பிஉள்ளனர்.
தேர்ந்த சமஸ்கிருதத்தைத் தவிர, தமிழிலும் தெலுங்கிலும் பாடல்கள் புனைந்திருக்கும் இவர் ஐந்தாம் வகுப்பு வரையே படித்தவர் என்றொரு குறிப்பு தெரிவிக்கிறது. எழுபத்திரண்டு மேளகர்த்தா ராகங்களிலும் மற்ற ராகங்களிலும், பல்வேறு தெய்வங்களின் பெயரில், இவரது பாடல்கள் அமைந்துள்ளன. அழகான ஸ்வராக்ஷரங்களும், கச்சிதமான சிட்டை ஸ்வரங்களும், இசையைக் குலைக்காத சாகித்யங்களும் இவர் பாட்டில் நிறைந்திருக்கின்றன,
வர்ணங்கள், கீர்த்தனங்கள், தில்லானாக்கள், ராகமாலிகைகள் என்று ஒரு முழுக் கச்சேரியே, இவர் பாடல்களைக் கொண்டு மட்டும் செய்யக்கூடிய வகையில், 700-க்கு மேலான பாடல்களைப் புனைந்து உள்ளார். துந்துபி, பானு கீரவாணி போன்ற கேட்கக் கிடைக்காத ராகங்களிலும் இவர் பாடல்கள் அமைந்துள்ளன. இந்துஸ்தானி இசையிலும் தேர்ச்சி பெற்றிருந்த இவர், வடநாட்டு ராகங்களான த்விஜாவந்தி, மதுகவுன்ஸ், சந்திரகவுன்ஸ், குர்ஜரி தோடி போன்ற வற்றிலும் கீர்த்தனைகள் புனைந்து உள்ளார்.
இவர் கீர்த்தனைகளைத் தொகுக்கவும் பிரபலப்படுத்தவும் இவரது மருமகள் சரோஜா ராமன், டில்லி யில் இருந்தபடி பெருமுயற்சி எடுத்து வருகிறார். கல்யாணி வரதராஜனின் பேரன், டில்லி ஆர். ஸ்ரீனிவாசன் ஒரு சிறந்த மிருதங்க கலைஞர்.

Comments