சங்கரதாஸ் சுவாமிகள் தந்த சங்கீத செல்வம்

- வாமனன் - திரை இசை வரலாற்று ஆய்வாளர் -
30th Dec, 2014

அறுபது, 'கர்ணாமிருதப்' பாடல்களிலிருந்து, ஐந்து பாடல்களுக்கு தமிழ் திரைப்படம் வந்துவிட்டாலும், பாடலுக்கான முக்கியத்துவம் குறையவில்லை என்றால், அது இசை மயமாக இருந்த தமிழ் நாடக மேடையின் தாக்கத்தால் தான். அத்தகைய இசை நாடகங்களின் மூல புருஷராகத் திகழ்ந்தவர், தூ.தா.சங்கரதாஸ் என்ற சங்கரதாஸ் சுவாமிகள்.

சங்கரதாஸ் சுவாமிகள்
ஆங்கில மோகத்தால் தாய்மொழி வெறுக்கப்பட்டும், கச்சேரி மேடைகளில் தெலுங்கு துதிக்கப்பட்டும் இருந்த காலத்தில், தமிழ் மக்களை, தனது மேடை நாடகங்கள் வாயிலாக, தமிழ் இசையில் திளைக்கச் செய்தவர் சுவாமிகள். தொழில்முறை நாடக மேடையின் பொற்காலத்தில், சங்கரதாசரைப் போல் வேறு சில நாடகாசிரியர்கள் இருந்தாலும், இசை நாடக ஆசானாக மிகப்பெரிய வெற்றியை அடைந்தவர் சுவாமிகள் தான். சின்னஞ்சிறார் நடித்த நாடகங்களின் வளர்ச்சிக்கும் பங்களிப்பு செய்தார்.
கர்நாடக இசை, தமிழ் இசை, தெம்மாங்கு, சிந்து போன்ற நாட்டுப்புற இசை வகைகள், பார்சி, மராட்டி நாடக மெட்டுக்கள் என்று பற்பல வர்ணமெட்டுக்களில், நாடகங்களுக்கு ஏற்ற பாடல்களை அமைத்து, நாடக இசைக்கு வளம் சேர்த்தார். தேவையான இடங்களுக்குத் தானே மெட்டமைத்தும் கொடுத்தார்.
சுவாமிகளின் பாடல்களில் சந்தத் தமிழ் சதிராடியது. அவருடைய பாடல்களில் வரும், தாள வின்னியாசங்களையும், சந்த அழகுகளையும் கண்டு மனமகிழ்ந்து, கஞ்சிரா மேதை, மான்பூன்டியா பிள்ளை, சுவாமிகளை தனது தத்துப்புத்திரராகக் கொண்டாராம். 'காயாத கானகத்தே' என்று குறமகள் வள்ளிக்கு வலை வீசாத நாடக நடிகர்கள் உண்டா? எத்தனை ஆயிரம் மேடைகளில், எத்தனை ஆயிரம் நடிகர்கள் சுவாமிகளின் அந்த வள்ளி திருமணப் பாடலை பாடினர்!
சுவாமிகள் அமைத்த பாடல்களை அவரிடம் கற்று, ஏராளமான நாடக நடிகர்கள் பாடியதால், அவருடைய பாடல்கள் ஒரு இசை இயக்கமாகவே உருவெடுத்தன. இதனால், தொழில்முறை நாடக நடிகர்களின் அமோகமான குருபக்திக்குப் பாத்திரமானார். நடிகர், 40 நாடகங்களின் ஆசிரியர், நடிப்பு ஆசிரியர், நாடகக் குழு தலைவர் என்று புகழ்பெற்ற சுவாமிகள், தாமோதர கணக்குப் பிள்ளையின் மகனாக தூத்துக்குடியில், 1867ல் பிறந்தார். ராமாயணப் புலவர் என்று புகழடைந்த தந்தையிடம் பாடம் கற்ற பின், பழனி தண்டபாணி சுவாமிகளிடம் படித்தார்.
பழம்புலவர் மரபிலே வந்தாலும், அன்றைய மக்கள் ஊடகமான நாடகத் துறையை சீர்திருத்தி, அதற்கு கண்ணியமும் கலைநயமும் கூட்டும் பணியை நிறைவேற்றினார். துறவறமும், தன்னலத்தை மிஞ்சிய மனோபாவமும் அவரிடம் நிரம்பியிருந்ததால், அவருடைய ஆளுமை ஓங்கி உயர்ந்தது.
'நாடகம் என்பது, ஒரு கதையை திரை, நடை, உடை, பாவனையாலும், இனிய கீதத்தாலும், இடத்திற்குத் தகுந்தபடி வசனத்துடனும் முதுமொழிகளுடனும் நடத்தப்படுவதே' என்று, சங்கரதாசர் தனக்கு வகுத்துக் கொண்ட வரையறை, தமிழ் சினிமாவிற்கும் சில மாறுதல்களுடன் பொருந்திப் போவது, அவருடைய வழியில் இன்றும் கலை உலகம் நடக்கிறது என்பதற்கு சான்று.
நாடக உலகத்தின் இசை சக்ரவர்த்தியான கிட்டப்பாவிற்கு, அறிமுகம் தந்ததும் அவரே. சினிமா ராணியாக பேசும் படத்தின் முதல் அத்தியாயத்தில் வலம் வந்த, டி.பி.ராஜலட்சுமிக்கு, நாடகக் குழுவில் புகலிடம் வாய்த்ததும் அவர் வாய்மொழியாலே. தலைசிறந்த தமிழ் மேடை நாடகங்களை அளித்த டி.கே.சண்முகத்தை, நாடக உலகத்திற்காக வரித்த குருநாதரும் அவரே. திரை உலகில் பல துறைகளில் பணியாற்றிய கலைஞர்களின் தலைமை ஆசானும் அவரே.
நாடக உலகத்திலிருந்து, திரை உலகம் வந்த ஏ.பி.நாகராஜன், பின்னாளில், 'நவராத்திரி, திருவிளையாடல், கந்தன் கருணை, விளையாட்டுப் பிள்ளை' முதலிய படங்களில் சுவாமிகளின் பாடல்களைப் பயன்படுத்தி தன்னுடைய நன்றியைப் புலப்படுத்தினார்.

Comments