பாடல் வரிக்கு முதலிடம் தந்த கே.வி.மகாதேவன்

- வாமனன் - திரை இசை வரலாற்று ஆய்வாளர் -
31st Dec, 2014

திரை இசையில் சாஸ்திரிய இசை (செவ்வியல் இசை), நாட்டுப்புற இசை, மெல்லிசை என்று பல அம்சங்கள், தேவைக்கு ஏற்றவாறு வழங்கும்.

கே.வி.மகாதேவன்
இவை ஒவ்வொன்றிலும் தனி முத்திரை பதித்து, பாடல் வரிகளில் பொதிந்த உணர்வுகள் வெளிப்படும்படியும், பாடலில் இனிமை மேலோங்கும் வண்ணமும் இசை அமைத்தவர், இசை மேதை, 'திரை இசை திலகம்' கே.வி.மகாதேவன்.
அறுபதுகளில் எழுந்த புராண பட வரிசைக்கு, நாடக இசையின் தொடர்ச்சியாக, வெற்றிகரமான பாரம்பரிய இசை தந்தவர் அவர். மகாதேவ ராகத்தில் தானே, 'திருவிளையாடல்' நடந்தது! 'தில்லானா மோகனாம்பாள்' திரையில் ஆடியபோது, தஞ்சை தரணியின் நாயன மணத்தோடும் சதிரின் எழிலோடும் சங்கீத மூர்ச்சனைகளைப் படித்தவர், 'மாமா!'
நலம் தானா என்று, சிக்கில் சண்முகசுந்தரத்திடம் அன்று மோகனாம்பாள் கேட்டதில் உள்ள கரிசனை, தமிழகம் எங்கும் இன்றும் ஒலிக்கிறதென்றால், அது நெஞ்சில் இருந்த கனிவு, பண்ணில் விளைந்ததால் தான்.
விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில், 'பா' வரிசைப் படங்களில் மெல்லிசை அலை எழுந்தபோது, 'வா, நானும் வருகிறேன்' என்று கைகோர்த்தவர் மகாதேவன். இதய கமலம் படத்தில் (1965) அவர் வடித்த இனிய நாதங்கள், இன்றளவும் வசீகரம் குன்றாத ஒலிச்சிற்பங்கள். இப்படி எத்தனையோ!
மகாதேவனை குறைந்தது, மூன்றாவது தலைமுறை இசைக்கலைஞர் என்று கூற வேண்டும். அவர் தாத்தா, திருவிதாங்கூர் சமஸ்தான அரண்மனையில் சங்கீத வித்வானாக இருந்தவர்.
அப்பா வெங்கடாசலம், ஆண்டவன் சன்னிதியில் இசை சமர்ப்பித்தவர். மாதம் மூன்று ரூபாயும், 20 படி அரிசியும் தான் சம்பளம்.
கடந்த, 1920ல் பிறந்த மகாதேவனின் இசைப் பாடங்கள், முதலில் அப்பாவிடம் தான் துவங்கின. பிறகு, அப்பாவே தேர்ந்தெடுத்த பூதப்பாண்டி அருணாசல அண்ணாவியிடம் சென்று, குருகுல முறையிலே சில ஆண்டுகள் இசை பயின்றார்.
தனது 13வது வயதில், ஸ்ரீபால கந்தர்வகான சபாவில் சேர்ந்தார் அன்றைய சூழ்நிலையில், இசை அறிந்த ஏழைப் பையன்களுக்கு, பாய்ஸ் கம்பெனிகள் தான் சரணாலயம். மேற்படி சபா அவரை, சென்னையில் அனாதையாக விட்டதால், யானைகவுனியில் ஒரு ஓட்டலில், பில் தொகையை உரக்கக் கூவும் பையனாக வேலை பார்த்தார்.
மாடர்ன் தியேட்டர்சில் சேர்ந்து, மனோன்மணி படத்தில் (1942), பி.யு.சின்னப்பா பாடிய, 'மோகனாங்க வதனி' பாடலுக்கு இசை அமைத்தார். ஆனந்தன் அல்லது அக்னி புராண மகிமை (1942), பக்த ஹனுமான் (1944), தன அமராவதி (1948) ஆகிய படங்களுக்குப் பிறகு, வாய்ப்புகள் அற்றுப் போயின. எச்.எம்.வி., நிறுவனத்தில் சில ஆண்டுகள், இசை அமைப்பாளராகப் பணியாற்றினார்.
ஐம்பதுகளில் நிலைமாறி, பல வெற்றிகள் குவிந்தன. டவுன் பஸ் (1955), முதலாளி (1957), மக்களைப் பெற்ற மகராசி (1957), தை பிறந்தால் வழி பிறக்கும் (1958), சம்பூர்ண ராமாயணம் (1958) போன்ற படங்களின் பாடல்கள், இன்றும் மக்கள் இசையாக உலவி வருகின்றன.
எம்.ஜி.ஆரின் திரைப் பயணம் நெடுக, மகாதேவனின் இசைத் தடங்கள் பதிந்தன. மெட்டுக்குப் பாடல் என்றில்லாமல், பாடலுக்குப் பொருத்தமான மெட்டு, வாத்திய இசை என்று மகாதேவன் செயல்பட்டதால், அவர் இசையில் மருதகாசியின் பாடல்கள் மணம்பரப்பின, கண்ணதாசனின் வரிகள் உன்னதத்தைத் தொட்டன.
சங்கராபரணம் தந்து (1980), கர்நாடக இசைக்கு மக்கள் ரசனையில் இடம் உண்டு என்பதையும், தெலுங்கு திரைப்பட இசையில் தனக்கு ஒரு தனியிடம் உண்டு என்பதையும் காட்டினார் மகாதேவன்.
பாடல்களின் இனிமையைப் போலவே, மகாதேவனுக்கும், அவருடைய உதவி இசை அமைப்பாளரான டி.கே.புகழேந்திக்கும் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் நட்பின் ராகம் ஒலித்தது. மிகப்பெரிய வெற்றிகள் நிறைந்த, நெடிய சாதனை சகாப்தத்தை, யார் மனதையும் புண்படுத்தாமல் மகாதேவன் செய்து முடித்தார்.

Comments