தமிழில் கீர்த்தனைகளை இயற்றிய கோடீஸ்வர அய்யர்

-லலிதாராம்- எழுத்தாளர் -
17th Dec, 2014

சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில், கிருதிகளை முன்னிறுத்திய கச்சேரி பத்ததி உருவான போது, சங்கீத மும்மூர்த்திகள் என்று குறிக்கப்படும் தியாகராஜர், தீக்ஷிதர், சியாமா சாஸ்திரி, ஆகியோர் அமைத்த கிருதிகளே கச்சேரிகளில் புழங்கின.

கோடீஸ்வர அய்யர்
அதற்கு பல காலம் முன்னே, தமிழில், அருணாசல கவிராயர், முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை போன்றோர், பாடல்கள் புனைந்திருப்பினும், அவர்கள் அமைத்த மெட்டுகள் அதிகம் கிடைக்கவில்லை. இதனால் ஆங்கொன்றும், ஈங்கொன்றுமாய் கோபாலகிருஷ்ண பாரதி போன்றோரின் பாடல்கள் கச்சேரிகளில் இடம்பெற்ற போதும், பெரும்பான்மையான பாடல்கள் தமிழில் அமையவில்லை.

இந்த நிலை இன்று பெருமளவு மாறியுள்ளது. அதற்கு முக்கிய காரணம் இருவர். முதலாமவர் பாபநாசம் சிவன். இவர் பாடல்கள் சென்ற நூற்றாண்டிலேயே பிரபலமடைந்து விட்டன. அவரது சமகாலத்தில் வாழ்ந்து, பல அரிய பாடல்கள் புனைந்த மற்றொருவர் கோடீஸ்வர அய்யர்.

நந்தனுாரில், 1869-ல் பிறந்த இவர்,- கவி குஞ்சர பாரதியின் பேரன். சிறு வயதில் பெற்றோரை இழந்த கோடீஸ்வர அய்யர், தன் பாட்டனாரிடம் சங்கீதமும், தமிழும் பயின்றதோடு, ஆங்கிலக் கல்வியிலும் தேர்ச்சி பெற்று பி.ஏ., பட்டமும் பெற்றார். சென்னை உயர்நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றிய போதும், தன் பாட்டனாரின் கீர்த்தனைகளைப் பிரபலப்படுத்தும் வகையில், ஹரிகதா காலட்சேபம் செய்து வந்தார்.

இவரது மொழித் தேர்ச்சியும், இசைத் தேர்ச்சியும் ஒருங்கிணைந்து, எழிலுறு பாடல்களாய் வெளிப்பட ஆரம்பித்தன. தனது, 47-வது வயதில், 72 மேளகர்த்தா ராகங்களிலும், தான் புனைந்த பாடல்கள் தொகுப்புக்கு 'கந்த கானாமுதம்' என்று பெயரிட்டு வெளியிட்டார். 'கந்த கானாமுத'த்தின் முகவுரையில் இடம் பெற்றிருக்கும் பிரபலங்களின் அணிந்துரைகள், அந்தக் காலகட்டத்தை உணர ஏதுவானவை. பரூர்சுந்தரமையர்,''குருடனுக்கு நேத்திரம் கிடைத்தது போல், உங்களிடம் சில கீர்த்தனைகளைக் கற்ற பிறகு, 72 ராகங்களையும், சர்வசாதாரணமாகவே பாடலாம் என்று உணர்ந்து கொண்டேன்,'' என்கிறார்.

''தமிழ் பாஷை, இசைக்கு பொருத்தமற்றது என்ற முடிவை பன்னாளாய் கொண்டுள்ள கொள்கை தப்பானது என்பதை இந்த நூல் எடுத்துக் காட்டுகிறது,'' என்கிறார் பாபநாசம் சிவன்.

''Mr. Kotiswara Iyer made first comprehensive attempt to compose kirthanas in all Melas. The scientific value of his kirtanas is of high order and this publication is a landmark,'' என்கிறார், டி.எல்.வெங்கடராம அய்யர்.

தெள்ளு தமிழில் விளங்கும் இந்தக் கீர்த்தனங்களில் மிளிரும் ஸ்வராக்ஷரப் பிரயோகங்களை, தமிழ்த் தாத்தா உ.வே.சா., துவாரம் வெங்கடசாமிநாயுடு போன்றோர் பெரிதும் பாராட்டியுள்ளனர். ஒவ்வொரு பாடலிலும், பாடல் அமைந்துள்ள ராகத்தின் பெயர் வருமாறு சாகித்யத்தை அமைத்திருப்பது மற்றொரு சிறப்பு. இவ்வளவு சிறப்பினைப் பெற்றிருந்த போதும், இந்தக் கீர்த்தனைகள் கச்சேரியில் அதிகம் பாடப்படாமலேயே இருந்தன. அவற்றை புழக்கத்துக்குக் கொண்டு வந்த பெருமை வித்வான் எஸ்.ராஜத்தைச் சேரும்.

Comments