மறக்க முடியாத டி.கே.ரங்காச்சாரியின் கருடத்வனி

-லலிதாராம்- எழுத்தாளர் -
16th Dec, 2014

பிரசன்னா, பேடி, வெங்கட், சந்திரா ஆகியோர் கிரிக்கெட் விளையாடிய காலத்தில், எத்தனைதான் திறமைசாலியாக இருந்தாலும், வேறு ஒரு சுழற்பந்து வீச்சாளர், இந்திய அணியில் இடம் பெற்றிருக்க முடியாது.

டி.கே.ரங்காச்சாரி
அதுபோல, அரியக்குடி, மதுரை மணி, ஜி.என்.பி., போன்ற மேதைகளின் சமகாலத்தில் வாழ்ந்த, பல அற்புத கலைஞர்கள் மேல் போதிய வெளிச்சம் விழாமல் போனது. அந்த வரிசையில், டி.கே.ரங்காச்சாரி, முக்கியமானவர். கடந்த, ௧௯௧௨, ஜூன் ௩ல், திருச்சி அருகே வராகனேரியில் பிறந்த ரங்சாச்சாரியின் முதல் குரு, அவர் தாய் ராஜலட்சுமி அம்மாள்தான். இள வயதிலேயே லயத்தில் மிகுந்த ஈடுபாடுடன் இருந்த ரங்காச்சாரி, கையில் கிடைத்த பாத்திரத்தில் எல்லாம் தாளம் இசைத்தபடியால், 'தவில் ரங்கன்' என்று செல்லமாக அழைக்கப்பட்டார்.

கோனேரிராஜபுரம் வைத்தியநாத அய்யரின் சிஷ்யரான கோடகநல்லூர் சுப்பையா பாகவதரிடம், குருகுலவாசம் செய்தபின், 1929-ல் சிதம்பரம் சென்றார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், சங்கீத பூஷண பட்டயப் படிப்பில் சேரச் சென்ற ரங்காச்சாரியின் இசைத்திறனைப் பார்த்துவிட்டு, அவரை நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்த்துக் கொண்டனர். படிப்பு முடிந்ததும், அண்ணாமலை பல்கலைகழகத்திலேயே பணியாற்றியபடி கச்சேரிகளும் செய்து வந்தார்.

இயற்கையிலேயே நல்ல கனமான சாரீரத்தை பெற்றிருந்த ரங்காச்சாரியின் கச்சேரி பதிவுகளைக் கேட்கும் போது, தோன்றும் முதல் வார்த்தை கவுவம். கவுரவமாய் பாடும்போதும், கேட்பவருக்கு அலுக்காதபடி விறுவிறுப்பாய் பாடமுடியும் என்பதை இந்தப் பதிவுகள் பறைசாற்றுகின்றன. ''ஒரு மாணவன், தன்னைச் சுற்றியுள்ள இசை அனைத்தையும் கேட்டு உள்வாங்கி, தனக்கே உரியதொரு பாணியை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதை எப்படி செய்வது என்பதை ரங்காச்சாரியின் இசையைக் கேட்டால் புரிந்து கொள்ளலாம்,'' என்று, தன் மாணவர்களிடம் ஜி.என்.பி., அடிக்கடி கூறுவாராம்.

கடந்த, 1950-களில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தண்டபாணி தேசிகருடன் இணைந்து, பண் ஆராய்ச்சியில் ரங்காச்சாரி ஈடுபட்டார். இருவருமாய் சேர்ந்து கச்சேரிகளும் செய்தனர். ஓதுவார் பரம்பரையில் வந்த தேசிகரும், வைஷ்ணவரான ரங்காச்சாரியும் ஒரே மேடையில் அமர்ந்து தேவாரத்தையும், திய்வபிரபந்தங்களையும் பாடியவற்றை கேட்டவர்கள், புண்ணியம் செய்தவர்கள். 1960-,௭௦களை ரங்காச்சாரியின் இசை வாழ்வின் உச்சம் எனலாம். இசை போதனையை வகுப்பறையைத் தாண்டி மேடையிலும் தொடர்ந்தவர் ரங்காச்சாரி என்றால் மிகையாது. அவரை 'ப்ரபசர் ஆன் தி டயஸ்' என்று கூட விளையாட்டாய் குறிப்பதுண்டு. தான் பாடுபவற்றின் சவுந்தர்யத்தை, கேட்பவர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஆங்காங்கே விளக்கமும் அளித்து, ரசிகர்களின் நிலையையும் தன்னுடன் சேர்த்து உயர்த்தியவர், ரங்காச்சாரி.

கடந்த, 1979-ல் அவர் மறைந்தார். எனினும், அவர் பாடிய கருடத்வனியும், வாகதீஸ்வரியும் சாகாவரம் பெற்று ரசிகர்களிடையே புழக்கத்தில் இருந்து வருகின்றன. அவருக்குப் பின், அவர் வழியை, வைரமங்கலம் லட்சுமிநாராயணன், பின்பற்றி வந்தார். இன்றைய கச்சேரி உலகில் அதைச் செய்து வருபவர் விதுாஷி, நீலா ராம்கோபால்.

Comments