சுயமரியாதைக்கு ஒரு முருகபூபதி

-லலிதாராம்- எழுத்தாளர் -
15th Dec, 2014

பாலக்காடு மணி அய்யர், பழனி சுப்ரமண்ய பிள்ளை, ராமநாதபுரம் சி.எஸ்.முருகபூபதி ஆகிய மூவரும், மிருதங்க உலகின் மும்மூர்த்திகள். இந்த ஆண்டு, வித்வான் முருகபூபதியின் நூற்றாண்டு.

முருகபூபதி
முருகபூபதியின் தந்தையார் சித்சபை சேர்வை, ராமநாதபுரம் மன்னர் ஆதரவில், புதுக்கோட்டை மான்பூண்டியா பிள்ளையிடம் குருகுலவாசம் செய்து, லயத்தில் தேர்ச்சி பெற்றார்.

சித்சபை சேர்வையின், நான்காவது மகனாக, 1914-ல் பிறந்த முருகபூபதி, தான் வளர்ந்த சூழலினால் இசையிடம் ஈர்க்கப்பட்டார். தன் தந்தை வாசிப்பதைப் பார்த்து தானும் மிருதங்கத்தை இசைக்க ஆரம்பித்தார். பின்னாளில், தமையன் சங்கரசிவ பாகவதரின் வழிகாட்டலில், தன்னை நெறிப்படுத்திக் கொண்டார். முருகபூபதியின் வாழ்வில் திருப்புமுனையாய், ஒரு கச்சேரி அமைந்தது. ஆர்.ஆர்.சபாவில் நடக்க இருந்த செம்மங்குடியின் கச்சேரிக்கு சவுடையாவும், பாலக்காடு மணி அய்யரும் பக்கவாத்தியம் வாசிக்க ஏற்பாடாகி இருந்தது. பம்பாய் சென்றிருந்த மணி அய்யர், கச்சேரி தினத்தன்றுதான் சென்னை வந்தடைவதாக இருந்தது. இடையில் ஏற்பட்ட ரயில் தாமதங்களால், அய்யரால் சரியான நேரத்துக்கு வந்து சேரமுடியாது என்று தெரிந்ததும், ஒரு ரயில் நிலையத்திலிருந்து தந்தி கொடுத்தார்.

மணி அய்யர் பிரபலத்தின் உச்சியிலிருந்த காலமது. அய்யரின் வாசிப்பை கேட்க வந்தவர்கள் ஏமாற்றமடையா வண்ணம், வாசிக்க யாரை கூப்பிடலாம் என்று தவித்துக் கொண்டிருந்த சபா நிர்வாகிகள், ராமநாதபுரம் ஈஸ்வரனின் பரிந்துரையில் முருகபூபதியை அணுகினர். ''எனக்கு சற்று பயமாகத்தான் இருந்தது. ரேட்டை ஒன்றுக்கு மூன்றாக உயர்த்திக் கேட்டால் நம்மை வாசிக்க சொல்ல மாட்டார்கள் என்றெண்ணி அதிகம் கேட்டேன். அவர்களுக்கு இருந்த அவசரத்தில் நான் எவ்வளவு கேட்டாலும் கொடுக்க தயாராக இருந்தனர்,'' என்று முருகபூபதி கூறியுள்ளார்.

அன்றைய கச்சேரியில், முருகபூபதி வாசித்த தனி ஆவர்த்தனத்தை தொடர்ந்து கூட்டம், 'முருகபூபதிக்கு இன்னொரு தனி' என்று கூச்சலிட ஆரம்பித்துவிட்டது. ''அன்றைக்கு செம்மங்குடி எனக்கு மூன்று தனி கொடுத்தார். ரசிகர்களும் வெகுவாக என்னை உற்சாகப்படுத்தினர்,'' என்றும் முருகபூபதி கூறியுள்ளார். முருகபூபதியின் வாசிப்பின் சிறப்பம்சங்கள் பல உண்டு எனினும், முதலில் கேட்பவரைக் கவர்வது அவரது மிருதங்க நாதம்தான். அவர் மிருதங்கம் எப்போதுமே, 100 சதவீதம் ஸ்ருதியுடன் இணைந்து இருக்கும். எவ்வளவுதான் விவகாரமாக வாசித்த போதும், அவர் வாசிப்பில் ஒவ்வொரு சொல்லும் தேனைக் குழைத்து வாசிப்பது போல இனிமையாக இருக்கும். வறட்டு சொற்களை அவர் வாசிப்பில் சிறிதும் காண முடியாது. குறிப்பாக, சர்வலகு கோவைகளை அவர் வாசிக்கும் போது, வலந்தலையில் உள்ள சாதத்தை தடவிக் கொடுத்தபடியே பல்வேறு நடைச்சொற்களை வாசிப்பது, அவர் சிறப்பம்சம்.

ஸ்ருதியுடன் ஒருங்கிணைவதை ஓர் உபாசனையாகவே செய்த மதுரை மணி அய்யருக்கு, முருகபூபதியின் வாசிப்பு வெகுவாகப் பிடித்திருந்ததில் ஆச்சர்யமில்லை. ஒரு கச்சேரியில், மதுரை மணி அய்யரின் தம்புரா பழுதாகி, அவ்வப்போது, ஸ்ருதியிலிருந்து விலகியபடி இருக்க,''எனக்கு தம்புராவே வேண்டாம். பூபதியாரின் மிருதங்க ஸ்ருதியே போதும்,'' என்று கச்சேரியைத் தொடர்ந்துள்ளார். ''வலந்தலையைப் போலவே, தொப்பியிலும் விரலைப் பிரித்து வாசிப்பதை நான்தான் அறிமுகப்படுத்தினேன் என்று நினைக்கிறேன். என் சிறு வயதில், அழகநம்பி பிள்ளை தொப்பியில் வாசித்துக் கேட்டதே, என்னை இவ்வாறு வாசிக்க தூண்டியது,'' என, வானொலி நேர்காணலில் கூறியுள்ளார்.

அரியக்குடி, ஜி.என்.பி., மதுரை மணி, செம்மங்குடி போன்ற பல முன்னணி வித்வான்களுக்கு பரவலாக வாசித்து வந்த முருகபூபதி, பின்னாளில் பலதிறமையான இளம் வித்வான்களை தூக்கி விடுவதிலும் முக்கிய பங்கு ஆற்றினார். ''சோமு என் தம்பி மாதிரி'' என்று அடிக்கடி கூறிய முருகபூபதி, பல்வேறு கச்சேரிகளில் அவருக்கு வாசித்துள்ளார்.

பின்னாளில், மதுரை டி.என்.சேஷகோபாலன் கச்சேரிகளுக்கு நிறைய வாசித்து வலு சேர்த்துள்ளார். புல்லாங்குழல் மேதை மாலி, மிகவும் விரும்பிய மிருதங்க வித்வான்களுள் முருகபூபதி முக்கியமானவர். தமது நீண்ட இசை பயணத்தில் எண்ணற்ற விருதுகளையும் கவுரவங்களையும் கண்டவர் முருகபூபதி.

சிவகங்கை சமஸ்தானத்தின் ஆஸ்தான வித்வான் பட்டம் (1949), பத்மஸ்ரீ (1973), சங்கீத் நாடக் அகாடமி விருது (1975), இசைப் பேரறிஞர் (1979), அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மாநிலக் கலைஞர், (1979) ஆகியவை அவருக்கு கிடைத்த ஒரு சில கவுரவங்களே. கடந்த, 1940-களிலும் 50-களிலும் கோலோச்சிய பாடகர்கள் பலரது மறைவு, 1960-களிலும் 70-களிலும் ஏற்பட்டது.

தன்னுடன் நெருங்கிப் பழகியவர்களில் மறைவினாலும், அடுத்த தலைமுறை வித்வான்கள் தலையெடுக்கத் துவங்கியதாலும், கச்சேரி வாசிப்பை கணிசமாகக் குறைத்துக் கொண்டு, தான் கற்ற கலையை அடுத்தவருக்கு அளிப்பதில் அதிக கவனம் செலுத்தினார். சுயமரியாதைக்கு ஒரு பூபதி என்று இன்றும் ரசிகர்கள் நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர், 1998-ல் காலமானார்.

Comments