சங்கீத உலகின் ஸ்வர ஞானி வோலேடி வெங்கடேஸ்வருலு!

- லலிதாராம் - எழுத்தாளர் -
22nd Dec, 2014

''இந்துஸ்தானி இசையில் உள்ளது போல, ஒவ்வொரு ஸ்வரத்திலும் சர்வ நிச்சயமாய், நங்கூரம் பாய்ச்சியது போல நின்று கார்வையில் கேட்பவரை மூழ்க வைக்கும் கம்பீரக் குரல்கள் தென்னகத்தில் உண்டா?''

வோலேடி வெங்கடேஸ்வருலு
என்று கேட்போருக்கு, பதிலளிக்க வித்வான் வோலேடி வெங்கடேஸ்வருலுவின் (1928 - 1989) குரலைத் தாண்டிச் செல்லத் தேவையில்லை.

நினைத்தது பேசும் சாரீரம் அமையப் பெற்றோரின் கச்சேரிகளில், குரலின் வசீகரத்தையும், அது செய்யக் கூடிய ஜாலத்தையும் காட்டும் களங்களாக மாறி, சங்கீதம் இரண்டாம் பட்சத்துக்குத் தள்ளப்பட்டு விடுவதுண்டு. வோலேடியின் கச்சேரிகளில் தன் திறனை காட்ட கச்சேரி ஒரு கருவி என்றல்லாமல், இசையின் அழகை வெளிப்படுத்த தன் குரல் ஒரு கருவி என்ற அர்ப்பணிப்பு மனோபாவத்தை உணர முடியும்.

கச்சேரியின் துவக்கத்தில் கண்ணை மூடி ஸ்ருதிஉடன், வோலேடி கலந்து விட்டால், அனைத்தையும் மறந்த மோன நிலை கச்சேரி முடியும் வரை தொடர்ந்து (அவருக்கு மட்டுமல்ல; கேட்பவருக்கும்) நிலைக்கும். சங்கீத உலகில், ஸ்வரஞானி என்றால் அது வோலேடிதான் என்று பலர் குறிப்பிடுவதுண்டு. முனுகண்டி வெங்கடராவ் பந்துலு விடம் அடிப்படைகளைக் கற்று கச்சேரி செய்யும் நிலைக்கு வந்ததும், சங்கீத கலாநிதி ஸ்ரீபாத பினாகபாணியிடமும் பயிற்சியைத் தொடர்ந்தார்.

பினாகபாணி வோலேடி யைப் பற்றி கூறுகையில், ''அவரால் எப்போதாவது தான் வர முடியும் என்பதால், அதிகம் உட்கார வைத்து சொல்லிக் கொடுத்தது இல்லை. என் பாட்டுப் புத்தகங்களை பார்த்து ஒரு முறை எழுதிக் கொண்டார் என்றால், அதை அப்படியே பாடிவிடக் கூடிய திறமை, அவருக்கு இயற்கையிலேயே இருந்தது,'' என்று கூறியுள்ளார்.

அகில இந்திய வானொலி யில், அவர் துவங்கிய 'சங்கீத சிக்ஷணா' என்ற நிகழ்ச்சி மூலம், 300க்கும் மேற்பட்ட, அற்புதமான பாடல்களை, இந்தியா முழுவதும் இசை மாணாக்கர்கள் கற்க முடிந்தது. நாளடைவில் தமிழகத்திலும் அவரது பெயர் பரவி, பல கச்சேரிகள் நடந்தன. கச்சேரி செய்வதில் அதிகம் ஆர்வமில்லாதிருந்த வோலேடியை, சக கலைஞர்கள் வற்புறுத்தி வரவழைத்தனர். வோலேடி பாட வேண்டும் என்பதற்காகவே, லால்குடி ஜெயராமன், பஹாடி ராகத்தில் தில்லானா ஒன்றை உருவாக்கினார்.

இந்துஸ்தானி இசையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு இருந்த வோலேடி, வடக்கத்திய ராகங்களை எந்த ஒரு உஸ்தாதுக்கும் இணையாக இசைக்கக் கூடிய திறன் பெற்றிருந்தார். ஒருமுறை படேகுலாம் அலிகானிடமே, 'தும்ரி' ஒன்றைப் பாடி பாராட்டைப் பெற்றதை, ஒரு நேர்காண லில் வோலேடி கூறியுள்ளார். பந்துவராளி, ஹிந்தோளம் போன்ற ராகங்களை அவர் விஸ்தரிக்கும்போது அவரிடம் இருந்த இந்துஸ்தானி இசையின் தாக்கத்தை உணர முடியும்.
கர்நாடக இசைக்கு என்றே உள்ள பிரத்யேகமான ராகங்களான கேதாரகவுளை, சுருட்டி போன்ற ராகங்களின் வடக்கத்திய வாடை சற்றும் கலக்காமல் இசைப்பதிலும், வோலேடி வல்லவர். ஓர் அரிய புகைப்படத்தில், பின்னணியில் அரியக்குடியும் படே குலாம் அலிகானும் இருக்க, வோலேட்டி தன் தம்புராவை ஸ்ருதி சேர்த்துக் கொண்டு இருப்பார். இந்தப் படமே அவரது சங்கீதத்தின் முழுமையான வர்ணனை எனலாம்.

Comments