இசை வேறு; பாடல் வேறு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்!

- ஷாஜி - இசை விமர்சகர் -
22nd Dec, 2014

எனக்கு இரண்டு வயது இருக்கும்போதே, இசை எனக்குள் வந்து விட்டது. தமிழ - கேரள எல்லைப் பகுதியில் இருந்த, கட்டப்பனை என்ற ஊரில் என், இளமைக் காலம் கழிந்தது.

எங்கள் வீட்டுக்கு அருகில், செண்டைமேள வாத்தியக் கலைஞர் குடியிருந்தார். அவருடைய வீட்டில் எண்ணற்ற இசைக் கருவிகள் இருந்தன. அதிலிருந்து எனக்கு இசை ஆர்வம் ஆரம்பமானது.
பின்னாளில், எங்கள் வீட்டில் ரேடியோ வந்தபோது, எப்போது வேண்டுமானாலும், இசை கேட்கலாம் என்ற நிலை உருவானது. மாநில எல்லைப் பகுதியில் இருந்ததால், தமிழ், மலையாளப் பாடல்கள் எப்போதும் வீட்டில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
செய்திகளைக் காட்டிலும், எனக்கு இசையே நிறைய பிடிக்கும். பின்னாளில், ஐதராபாத்தில் வாழ்ந்த போது, மேற்கத்திய இசை அறிமுகமானது. என் அறை நண்பன், கிடார் இசைக் கலைஞன். அமெரிக்காவில் உள்ள, அவனது பெற்றோர், மாதந்தோறும், மூட்டை மூட்டையாக ராப், டெக்னோ இசைத்தட்டுகளை அனுப்புவர். அதுவரை, மேற்கத்திய இசை என்றால், காட்டுக்கத்தல் என்ற என் முன்முடிவு, உடைந்து நொறுங்கியது. அதில் இருந்து, அனைத்து இசைகள் பற்றிய என் பார்வை யும் மாறியது.
இசையையும் பாடலையும், நாம் பிரித்துப் பார்க்க வேண்டும். இசை என்றால், பாடல் என்றே நம்மவர்கள் புரிந்து வைத்து உள்ளனர். ஹிப்ஹாப், டெக்னோ போன்ற மேற்கத்திய இசை வடிவங்களை தவிர்த்து, அனைத்து இசை வடிவங்களையும் இன்று வரை கேட்டு வருகிறேன்.
ரெக்கார்டுகளில் இசை கேட்பது, எனக்கு பிடித்த விஷயங்களில் ஒன்று. இதுவரை, 13,500 இசைத்தட்டுகளை சேகரித்து வைத்துள்ளேன். ஆனால், தமிழிலில், 'கிழக்கு சீமையிலே'க்குப் பிறகு, இசைத் தட்டுகள் வருவது நின்று போனது. சமீபத்தில், நான் மதிக்கக் கூடிய கர்நாடக இசை மேதையை நேர்காணல் செய்த போது, உலகத்தின் மிகச் சிறந்த இசை, நம்முடைய இசை என்றார்.
அதேபோல், என் ஆஸ்திரேலிய தோழி, தமிழகம் வந்திருந்த போது, மதுரை மணி அய்யரின் பாடல்களை காண்பித்தேன். அதற்கு அவர், 'இது தமிழக பழங்குடியினரின் பாடலா?' என்று கேட்டார்.
இந்த இரண்டு கருத்துகளுடனும், நான் முரண்படுகிறேன் நம் இசை, பிராந்திய இசை. உலகத்தின் ஒரு மூலையில் நம் நாடு இருக்கிறது. இதிலும், பல்வேறு இசை வடிவங்கள் உள்ளன. எனவே, நம்முடைய இசை தான், உலகத்தில் உள்ள அனைத்து இசையைக் காட்டிலும் சிறந்த இசை என்ற முடிவுக்கு வருவது தவறு. அப்படி வர வேண்டும் எனில், உலகத்தில் உள்ள அனைத்து வகையான இசையையும் அறிந்திருக்க வேண்டும். நம் அம்மாவின் சமையல், நமக்கு வாழ்வின் சிறந்த பரிசாக இருக்கலாம். அதற்காக, அவரே, உலகின் சிறந்த சமையலர் ஆக முடியாது என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும்.

Comments