தமிழ் திரை உலகில் முதல் பின்னணி பாடகர் யார்?

- திவாகர் சுப்பிரமணியம் - (நிறுவனர், ஸ்கூல் ஆப் இண்டியன் பிலிம் மியூசிக்) -
22nd Dec, 2014

பொதுவாக பாடல்களில், மெட்டுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் தன்மை நமக்குண்டு. அது நம், திரைப்பட பாடல்களுக்கும் பொருந்தும். அதனாலேயே, பாடகர்கள் மற்றும் பாடகி களிடமிருந்து, பாடல் தொடர்பாக நாம் அதிகம் எதிர்பார்க்கிறோம். அதனை அவர்கள் பூர்த்தி செய்து விட்டால், அவர்களை துாக்கி வைத்து கொண்டாடவும் செய்கிறோம்.

வியாபார நிறுவனங்களின் துவக்க விழாக்களிலும், சமூக நிகழ்ச்சிகளிலும், கலாசார நிகழ்ச்சிகளிலும் மட்டுமல்லாமல், சமூக விவாதங்களில் கூட, அவர்கள் பங்கேற்கின்றனர். இன்னும் சொல்லப் போனால், சில விவாதங்களே கூட, அவர்களைப் பற்றியும் அவர்கள் பாடிய பாடல்களைப் பற்றியும் நடக்கின்றன. பின்னணி பாடகர் (ப்ளேபேக் சிங்கர்) என்ற வார்த்தை, இந்திய திரை உலகத்திற்கே உரித்தானது. இந்தியாவில் மட்டும், ஏன் இப்படி தனி சொல்லாக, பின்னணிப் பாடகர் என்ற வார்த்தை உருவானது என்று யோசித்தால், அதற்கு விடை தேட, நாம் பல ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும்.
கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் ஒளியையும், ஒலியையும் தனித்தனியே பதிவு செய்ய முடியாத சூழலில், நடிகர், நடிகைகளே பாடுவது தவிர்க்க முடியாததாக இருந்தது. உதாரணத்திற்கு, 1935ல், பிரபல கர்நாடக இசைப்பாடகரான தண்டபாணி தேசிகர் நடித்த, 'நந்தனார்' திரைப்படத்தில் அவரே பாடி நடித்திருப்பார். படப்பதிவின்போதே அந்த படத்திற்காக அவர் பாடிய, எல்லா பாடல்களும் பதிவுசெய்யப்பட்டன.
கால மாற்றத்தில் தொழில் நுட்ப வளர்ச்சி வந்தபின்பு ஒலிப்பதிவு கூடத்தில் முன்பே பதிவுசெய்யப்பட்ட பாடல், படமாக்கப்படும்போது ஒலிக்க விடப்பட்டது. கடந்த, 1938ல், ஏவி.எம்., நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட, 'நந்தகுமார்' என்ற திரைப்படத்தில், மும்பையை சேர்ந்த கர்னாடக இசைப் பாடகி லலிதா வெங்கட்ராமன், முதன் முதலில் தமிழ் திரைப்படத்தில் பின்னணி பாடி, ஒரு புதிய வரலாற்றை துவக்கி வைத்தார்.
பிறகு, கேட்கும் பாடலுக்குத் தக்க நடிகர், நடிகைகள் வாயசைத்தால் போதும் என்ற நிலை உருவானது. அந்த சூழலில் பாடத் தெரியாத நடிகர், நடிகைகளுக்கும் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு ஏற்பட்டது. இதனால், தொழில்முறை பாடகர்கள் என்ற, ஒரு புதிய பிரிவே உருவானது. அவர்கள், தங்கள் குரலை மட்டுமே திரைப் பாடல்களுக்கு வழங்கினர். இந்தப் பின்னணியில்தான் பின்னணிப் பாடகர் (ப்ளேபேக் சிங்கர்) என்ற சொற்சேர்க்கை தமிழ் திரையுலகிலும் உருவாயிற்று.
- தொடரும்

Comments