இசை கேட்டால் பாறை மனதும் பறவையின் இறகாகும்!

- அ.வெண்ணிலா - கவிஞர் -
23rd Dec, 2014

எனது, 16 வயதில் இருந்தே, இசை என் ஆழ்மனதில் அமர்ந்து கொண்டது. நேரடியாக இசை பரிச்சயம் இல்லை எனினும், இலக்கியம் வழியாக, கர்நாடக இசையை அறிந்து கொண்டேன்.

தி.ஜானகிராமனின் 'மோகமுள், செம்பருத்தி' போன்ற நாவல்கள், அதை துவக்கி வைத்தன. வீணை மீட்டுவதை நிறுத்திய பின்னும், தந்திக்கம்பிகள் அதிர்ந்து கொண்டே இருப்பதைப் போல, அந்த நாவல்களை வாசித்த பின், கர்நாடக இசையை கேட்க வேண்டும் என்ற ஆர்வம் என்னை, நிழல் போல தொடர்ந்து வந்தது.

அதன் முதற்கட்டமாக, வீணை பாலச்சந்தர், வீணை தனம்மாள், பெங்களூரு நாகரத்தினம் அம்மாள் போன்றவர்களின் வாழ்க்கை வரலாறுகளை தேடித்தேடி வாசித்தேன். தமிழிசையின் மீது பேரார்வம் கொண்டு, அது தொடர்பான நூல்களை வாசித்தேன். தஞ்சை ஆபிரகாம் பண்டிதரின் 'கருணாமிர்த சாகரம்', திருச்சிற்றம்பலம் அறிஞர் மு.அருணாசலத்தின் 'தமிழ் இசை இலக்கண, இலக்கிய வரலாறு' என, பெரும்பாலான நூல்களை வாசித்து, என் சேமிப்பில் வைத்துள்ளேன்.

பல்வேறு நடைமுறைச் சிக்கலால், என் இளமைக் காலத்தில், இசையை முறையாக கற்றுக் கொள்ள முடியவில்லை. எனது நிறைவேறாத விருப்பம், என் குழந்தைகளின் வழி நிறைவேற வேண்டும் என்று நினைத்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன், என் குழந்தைகளோடு நானும் வாய்ப்பாட்டு பயின்றேன். இளமைப் பருவ விருப்பம், அதன் அடுத்த பருவத்தில் நிறைவேறிக் கொண்டிருக்கிறது.

அப்போது, நானும் என் மகள்களும் வகுப்புத் தோழிகள். தோழிகளோடு வாய்ப்பாட்டு பயில்வது, தேவதைகளோடு, கவிதை வாசிப்பதைப் போல. அந்த ஒவ்வொரு நாளும் ரம்மியமாய் கழிந்தது. என் நண்பர்கள், எப்போதும் என் இசை ஆர்வத்தை தூண்டி விடுவர். அவர்களுக்காக, கர்நாடக இசைத்தட்டுகள் வாங்கும் போது, எனக்கும் சேர்த்து வாங்கி விடுவர். இலக்கியத்தை போலவே, இசையும் வாழ்வை, தோழமையை இன்னும் இனிப்பாக்குகிறது. நித்யஸ்ரீ மகாதேவன், சுதா ரகுநாதன், அருணா சாய்ராம், டி.எம்.கிருஷ்ணா போன்றோரின் பாட்டுகளை நாள் முழுக்க கேட்டுக் கொண்டிருக்கலாம்.

காயத்ரியின் வீணையையும், எல்.சுப்பிரமணியத்தின் வயலினை யும், கேட்ட காதுகள், வாழ்வை கொண்டாடாமல் இருக்குமா?

அடிப்படையில் நான் கவிஞர் என்பதால், பாம்பே ஜெயஸ்ரீ, உன்னிகிருஷ்ணன் போன்ற கர்நாடக இசைக் கலைஞர்கள் பாடிய, பாரதியின் கவிதைகளை விரும்பிக் கேட்பேன். அது, என்னை வேறொரு உலகத்துக்குள் அழைத்துச் செல்லும். அந்தப் பாடல்களை கேட்பதற்கு முன், பெரும் பாறை போல் இருக்கும் மனது, பின் காற்றில் பறக்கும் பறவையின் இறகுகளாக மாறிப் போகும். யாருமே மிதிக்காத ஆற்று மணலில் பதியும் முதல் காலடி போல, நெஞ்சில் பதியும். அதிர்ந்து அடங்கும் இசை, நரம்புகளுக்கானது; காற்றில் கலந்த இசை, பறவைகளுக்கானது.

Comments