மாற்றங்களை ஏற்ற தமிழ் திரை உலகம்

- திவாகர் சுப்பிரமணியம் - (நிறுவனர், ஸ்கூல் ஆப் இண்டியன் பிலிம் மியூசிக்) -
23rd Dec, 2014

தொழில்நுட்பம் இல்லாமல் சினிமா இல்லை. சினிமா பாடலும் இல்லை. திரைப்படத்தை ஆளுமை செய்வது போலவே, திரைப் பாடல்களையும், தொழில்நுட்பம் ஆளுமை செய்து, அதன் அவ்வப்போதான மாற்றங்களை, உடனுக்குடன் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது.

திரைப்பாடல்களின் உள்ளடக்க கருத்துகளில் எப்படி சமூக, கலாசார, பொருளாதார காரணிகள் பாதிப்பை ஏற்படுத்து கின்றனவோ, அதுபோலவே, மின்னணு தொழில்நுட்பமும், பாடல்களில் அதீத பாதிப்பை ஏற்படுத்தி, அதன் உருவத்தையே மாற்றி அமைக்கிறது. சில நேரம், அதன் உள்ளடக்கத்திலும் ஊடுருவி நிற்கிறது.

மின்னணு இசை தொழில்நுட்பம் என்பது, வெறும் வன்பொருள், மென்பொருள் சார்ந்த சமாசாரம் அல்ல. ஒலிப்பதிவு கருவிகள், இசைக் கருவிகள், இசையை உருவாக்கும் கருத்துருவாக்கங்கள், இசையின் பாகங்களை பிரித்தும் இணைத்தும் மேம்படுத்தும் கருவிகள் என, பல தொழில்நுட்பங்கள் அதனுள் அடங்கும். தமிழ் திரைப்பாடல்களை, மின்னணு இசைத் தொழில்நுட்பம் எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதை பார்ப்பதற்கு முன், தமிழ் படப்பாடல்கள் சமீப காலத்தில் எப்படி மாறிஇருக்கின்றன என்பதை சுருக்கமாக பார்க்கலாம். தொழில்நுட்ப மாற்றங்கள், திரை இசை பாடல்களில் பிரதிபலிப்பது ஒன்றும் புதிதல்ல.

ஆனால், கடந்த, ௩௦ ஆண்டுகளில், மின்னணு தொழில்நுட்பத்தால், தமிழ் திரை இசைப் பாடல்கள் அடைந்த மாற்றங்கள் குறிப்பிடத்தக்கவை. நம் காலத்தை, 'ஒலி துல்லிய காலம்' என்று, சொல்லிவிடலாம். ஒலி துல்லியம் மட்டுமல்லாமல், புதுப்புது இசை வகைகளை, ஒலிகளை, கருத்துகளை உள்வாங்கி, அவை நாள்தோறும் புதுப் பரிமாணம் கொள்ளும் செயல்களும் நடக்கின்றன. ஏராளமான பாடகர்களின் வருகை, இன்னொரு வீச்சை உண்டாக்கியிருக்கிறது.

இவை எல்லாமுமாக சேர்ந்து, திரை இசையில் ஒரு மறுமலர்ச்சியே உருவாகியுள்ளது. இசையின் பரிமாணத்தையும், ஒலியின் தரத்தையும் அது மறுவரையறை செய்துள்ளது. முன்பு குரல், முன்னணியில் ஒலித்தது. இசை பின்னால் இருந்தது. இன்று குரல், கருவி இசையோடும், இசை கோர்வை களோடும் சேர்ந்து ஒலிக்கிறது. எல்லாவித மாற்றங்களும் தமிழனின், பாடல் கேட்கும் ஞானத்தை, இசையனுபவ அறிவை மேம்படுத்தியும் விரிவுபடுத்தியும் இருக்கின்றன. மாற்றங்களை தமிழர்கள் ஒதுக்கிவிடவில்லை. காலத்தின் மாற்றங்களை கண்டு திகைத்து நின்றுவிட்டால், அது நம்மைப் புறம் தள்ளிவிட்டு முன்னே சென்றுவிடும் என்பது, தமிழன் அறியாததா என்ன?

- தொடரும்

Comments