8வது அதிசயம் யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி பிள்ளை!

- லலிதாராம் - எழுத்தாளர் -
24th Dec, 2014

தமிழகத்திலிருந்து இலங்கைக்குச் சென்று பெரும் பெயர் ஈட்டியவர்கள் பலருண்டு. இலங்கையில் பிறந்து, தமிழகத்தின் ஒவ்வொரு ஊரிலும், இவர் வந்து வாசிக்கமாட்டாரா என்று, ஏங்க வைத்தவரும் உண்டு. அவர்தான் தவில் மேதை, யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி பிள்ளை (1933 - 1975).

தட்சிணாமூர்த்தி பிள்ளை!
மறைந்த நாகஸ்வர மேதை செம்பனார்கோவில் வைத்தியநாதன், ''நாங்கள் யாழ்ப்பாணத்துக்குச் சென்றபோது, ஒரு சிறுவன் வாசிக்கிறான் என்று சொன்னார் கள். காவேரிக் கரையில் நாம் பார்க்காத கலைஞர்களா என்று சற்று இளக்காரமாய்த்தான் நினைத்தோம். அந்தச் சிறுவன் வாசித்துக் கேட்டதும் ஸ்தம்பித்துப் போனோம்,'' என்று கூறியுள்ளார்.
மேதைகளின் இசைக்கு ஒரு பொதுத்தன்மை உண்டு. பற்பல அடுக்குகளாய் அமைந்து, பாமரர்க்கும் பண்டிதர்க்கும், ரசிக்கவும் கற்கவும் ஏதோ ஒன்று பொதிந்திருக்கும் தன்மையே அது. தேர்ந்த கர்நாடக இசை ரசிகர்களே, லய நுணுக்கங்களை போதிய அளவு கவனம் செலுத்தி ரசிக்காத நிலையில், தமிழகத்தின் குக்கிராமங்களில் கூட, தட்சிணா மூர்த்தியைப் பார்த்துவிட மாட்டோமா, அவர் வாசிப்பைக்
கேட்டுவிட மாட்டோமா என்று கூட்டம் நிரம்பி வழிந்தது ஆச்சரியம்தான். இல்லாவிட்டால் கிருஷ்ண கான சபையில் இவர் வாசிப்பைக் கேட்ட பாலக்காடு மணி அய்யர், இவரை உலகின் 'எட்டாவது அதிசயம்' என்று சொல்லியிருப்பாரா?
ஒரு அட்சரத்தில் மூன்று, நான்கு, ஐந்து, ஏழு, ஒன்பது மாத்திரைகள் வரும் நடைகளே நடைமுறையில் இருக்க, ஒரு அட்சரத்தில் 11, 13 மாத்திரைகள் வரும் வகையில் நடை அமர்த்தி, முதன்முதலில் வாசித்தவர் தட்சிணாமூர்த்தி பிள்ளை தான். எவ்வளவு நேரம், எவ்வளவு வேகமாக வாசித்தபோதும் ஒவ்வொரு சொல்லும் அதற்கு உரிய கனமுடன், தெள்ளத் தெளிவாய் வாசிக்கும் திறன், அவர் தனிச் சிறப்பு என்று, கேட்டவர்கள் இன்றும், அவரை நினைத்து உருகிப் போவதுண்டு.
''இயற்கையிலேயே லயப் பிண்டமாக பிறந்துவிட்ட தட்சிணாமூர்த்தி பிள்ளை, தஞ்சாவூரில் இருந்தபடி, நீடாமங்கலம் சண்முகசுந்தரம் பிள்ளையுடனும், நாச்சியார்கோயில், ராகவ பிள்ளையுடனும் சேர்ந்து, காருக்குறிச்சி அருணாசலம் போன்ற நாகஸ்வர சிகரங்களுக்கு வாசித்த காலத்தை பொற்காலம் என்றுதான் சொல்ல வேண்டும். அவரைப் போன்ற தவில் வித்வான், அவருக்கு முன்னாலும் இல்லை; அவருக்குப் பிறகும் வரப்போவதில்லை,'' என்கிறார், தட்சிணாமூர்த்தி பிள்ளையுடன் நெருங்கிப் பழகிய, பி.எம்.சுந்தரம். யார்க்கும் எட்டா கற்பனையும், அதை செயல்படுத்திக் காட்டும் ஆற்றலும் கைவரப் பெற்ற அந்த மாமேதை, துரதிர்ஷ்டவசமாய், தனது 42வது வயதிலேயே மறைந்தார்.

Comments