அரசியல் காயம் தீர்க்கும் மருந்து கர்நாடக இசையே!

- தங்கம் தென்னரசு - முன்னாள் தி.மு.க., அமைச்சர் -
24th Dec, 2014

என் தாய்வழி தாத்தா ராமசாமி நாயக்கர், கஞ்சிரா கலைஞர். அம்மா, ராஜாமணி, வாய்ப்பாட்டில் தேர்ச்சி பெற்றவர். அதனால், சிறுவயதில் இருந்தே, நான் இசையோடு வளர ஆரம்பித்தேன். எண்பதுகளில், நாடு முழுக்க, ஒருபக்கம், இந்திப் பாடல்களும், மறுபக்கம் மேற்கத்திய இசைப் பாடல்களும், ஆக்கிரமித்திருந்தன. ஆனால், கர்நாடக இசையைப் போல, என்னை எந்த இசையும் பெரிய அளவில் கவரவில்லை.

அப்போது தான், மகாராஜபுரம் சந்தானம், பாலமுரளிகிருஷ்ணா, ஜேசுதாஸ் போன்ற கர்நாடக இசைக் கலைஞர்களின் குரல்களில் சொக்கிக் கிடந்தேன். சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தபோது, கர்நாடக சங்கீதத்தில், பெரிய அளவிலான ஈடுபாடு ஏற்பட்டது.
சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி நடக்கும் போதெல்லாம், எல்லா கோவில்களிலும் கச்சேரி நடக்கும். அதில், கர்நாடக இசை ஜாம்பவான்கள் பாடுவர். அதை நேரில் கேட்பதே, புதிய அனுபவமாக இருக்கும். அதேநேரம், தஞ்சாவூர், மயிலாடு துறை, நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் நடக்கும், கர்நாடக இசைக் கச்சேரிகள் அனைத்திலும் பங்கு கொள்வேன். எண்பதுகளில் வெளிவந்த 'சிந்து பைரவி' திரைப்படம், கர்நாடக இசை குறித்த அனுபவத்தை, அடித்தட்டு மக்கள் வரை கொண்டு சென்றதால், பெரும்பாலான இசை நிகழ்ச்சிகளில் மக்கள் திரளாக கலந்து கொள்வர்.
மோகனம், கல்யாணி, பைரவி, ஹிந்தோளம் போன்ற ராகங்களை கேட்கும் போதே, மனசு மயிலிறகால் வருடி விட்டது போல் இருக்கும்.
கடந்த, 1993ல், வேலைவாய்ப்புக்காக, சென்னை வந்தபோது, சபாக்களுக்கு செல்லும் பழக்கம் ஏற்பட்டது. மார்கழி இசை உற்சவத்தில் நடக்கும் அனைத்து இசை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வேன். ஒவ்வொரு நாளும் புதுப்புது அர்த்தங்கள் கிடைக்கும்.
காருக்குறிச்சி அருணாசலம், இஞ்சிக்குடி சுப்பிரமணியன் போன்றோரின் நாதஸ்வரத்தை கேட்கச் சொன்னால், நாள் முழுக்க, சலிக்காமல் கேட்பேன். பாம்பே ஜெயஸ்ரீ, சஞ்சய் சுப்பிர மணியன், டி.எம்.கிருஷ்ணா போன்றோர் பாடினால், சாப்பிடக் கூடச் செல்லாமல், கேட்டுக் கொண்டே இருப்பேன்.
சிறுவயதில் ஏற்பட்ட இசை ஆர்வம், இன்று வரை, என் நிழல் போல, தொடர்ந்து வருகிறது. இதுவரை என் சேமிப்பில், 2,000 இசைத்தட்டுகள் உள்ளன. இரண்டு தலைமுறைக்கு முந்தைய கர்நாடக இசை கலைஞர்களின் இசைத்தட்டுகளையும் சேகரித்து வைத்துள்ளேன். அரசியலில் பல்வேறு சிக்கல்கள், மனக்கஷ்டம், இறுக்கம் ஏற்படும் போதெல்லாம், கர்நாடக சங்கீதத்தை கேட்க ஆரம்பிப்பேன். பெரிய பாரத்தை இறக்கி வைத்தது போன்ற நிம்மதி அப்போது ஏற்படும். இப்போதும் வெளியூர்களுக்கு காரில் செல்லும் போதெல்லாம், கர்நாடக சங்கீதத்தை கேட்பேன். இசை என், சர்வ ரோக நிவாரணி.

Comments