சாதாரண மக்களின் வாழ்வு அனுபவங்களை பிரதிபலிக்கும் திரைப்பட பாடல்கள்!

-- திவாகர் சுப்பிரமணியம் - (நிறுவனர், ஸ்கூல் ஆப் இண்டியன் பிலிம் மியூசிக், சென்னை) -
19th Dec, 2014

ஒரு திரைப்படத்திற்கு முழுமையான அளவில் அர்த்தமும் அடையாளமும் தருவது இசை என்றால், அது மிகை இல்லை.

முன்னணியாகவோ பின்னணியாகவோ, இசை இல்லாமல் சினிமா இல்லை. முன்னணி இசை என்பது, அது ஒலிக்கிற நேரம், அது மட்டுமே திரை ஒலியாக வியாபித்திருக்கும். பின்னணி இசை என்பது, வசனத்துக்கும் சிறப்பு சப்தங்களுக்கும் பின்னால் ஒலித்துக் கொண்டிருப்பது.

பெரும்பாலும் உணர்ச்சி பூர்வமான பின்னணி இசையை கொண்டவை, மேற்கத்திய திரைப் படங்கள். ஆனால், இந்திய படங்களில் பாடல்களுக்கே, அதாவது முன்னணி இசைக்கே, அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. இது தமிழ் சினிமாவிற்கும் பொருந்தும். ஒரு படத்தில் இடம்பெறும் ஐந்தோ அல்லது அதற்கு மேற்பட்ட பாடல்களோ திரைப்படத்தை ரசிக்கும் ஒரு அனுபவத்திற்கு ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்கின்றன.

கலை, மொழி, தொழில்நுட்பம் சார்ந்த காரணிகள் கூட்டாக சேர்ந்து, இயங்கும் போதுதான் இந்த பாடல்கள் உருவாக முடியும். தமிழ் திரைப்பாடல்கள் பல விஷயங்களை பகிர்ந்து கொள்கின்றன. பாத்திரத்தை அறிமுகம் செய்கின்றன; சூழலை அழுத்தமாக சொல்கின்றன; பொழுது போக்காக அமைகின்றன; மகிழ்ச்சி, துக்கம், காதல், பிரிவு போன்ற பல உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றன.

திரைப்படங்களில் இடம்பெறும் பாடல்களின் வகைகள் பலதரப்பட்டவை. பெயர்கள் போடும்போது இடம்பெறும் பாடல், கதை சொல்லும் பாடல், நாட்டியப் பாடல், நையாண்டிப் பாடல், தாலாட்டுப் பாடல், தத்துவப் பாடல் என்று அந்த பட்டியல் நீள்கிறது. பெரும்பான்மை மக்களின் இசையாக இருப்பது திரை இசையே. ஏனெனில், அதுதான் அவர்கள் வாழ்வனுபவங்களுக்கு அருகில் இருக்கிறது.

சமூக, கலாசார, அரசியல் சார்ந்த விஷயங்கள் மட்டும் அல்லாமல், தனிமனித உணர்ச்சிகளையும் அவைகள் வெளிப்படுத்துகின்றன. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், தன் பாடல்கள் வழியே சமூக பிரசாரத்தை முன்வைத்தார். கண்ணதாசனோ காதல் பாடல்களின் வழியே களிநடம் புரிந்தார். இப்படி எத்தனையோ பாடல் ஆசிரியர்கள், எளிய மொழியில் விதவிதமாக உணர்வுகளைச் சொல்ல கருவியாக அமைவது, திரைப் பட பாடல்கள். அவை சினிமாவின் அங்கம் மட்டும் அல்ல. தமிழ் மக்கள் அன்றாடம் உச்சரிக்கும் வேதம்.

- தொடரும்

Comments