திரை இசையை புரட்டி போட்ட எலக்ட்ரானிக் கீ போர்டு

- திவாகர் சுப்பிரமணியம் - (நிறுவனர், ஸ்கூல் ஆப் இண்டியன் பிலிம் மியூசிக்) -
24th Dec, 2014

கடந்த, 1980 வரை, மின்னணு (எலக்ட்ரானிக்) தொழில்நுட்பங்கள் எதுவும் இல்லாமல், பெரும்பாலும் ஒலியிசை கருவிகளின் வழியாகவே, தமிழ் திரை இசை உருவானது.

ஆனால் மேற்கத்திய இசை கருவிகளான எலக்ட்ரிக் கிடார், பேஸ் கிடார் போன்றவை, இதில் விதிவிலக்கு.அப்படி ஒலியிசை கருவி களை மட்டுமே வைத்து அமைக்கப்பட்ட திரையிசையின் வடிவத்தை, மின்னணு விசைப்பலகையின் (எலக்ட்ரானிக் கீ போர்டு) வரவு மாற்றியது. ஒலியிசை கருவிகளுக்கு, மின்சாரமோ இதர கருவிகளோ தேவையில்லை. மின்னணு விசைப்பலகைகளுக்கோ மின்சாரமே பிரதானம். இதுதான் இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்.
கடந்த, 1980களில் 'கேசியோ, ரோலண்ட், யமகா' போன்ற நிறுவனங்கள் உருவாக்கிய, மின்னணு விசைப்பலகைகள் மிகப் பிரபலமாக இருந்தன. திரையிசை கலைஞர்கள் பலருக்கும், அவற்றின் மேல் ஒரு மயக்கமே இருந்தது. அவற்றுள் விதவிதமான புதிய மின்னணு ஓசைகள் இருந்தது மட்டும் காரணம் அல்ல. திரை இசையை மேம்படுத்த, புதிய பாணிகளை ஒருங்கிணைக்க, ரசிகனுக்கு புது அனுபவத்தை எற்படுத்த, என்று வேறு சில காரணங்களும் அதில் இருந்தன.
கடந்த, 1982ல், ஏவி.எம்., தயாரிப்பில், எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்து வெளியான 'சகலகலாவல்லவன்' திரைப்படத்தில் இடம் பெற்ற, 'இளமை இதோ இதோ' என்ற பாடலில் ஒலிக்கும், சில புதிய இசை துணுக்குகளுக்கு, இந்த மின்னணு விசைப்பலகையே காரணமாக இருந்தது.
புது ஒலிகள் மட்டுமில்லாமல், கொஞ்ச காலத்தில், மின்னணு விசைப்பலகைகளில், 'போர்ட்டோ மெண்டோ' என்ற இசைத் தொழில்நுட்பமும் சேர்க்கப்பட்டது. அதன் மூலம், இசையில் எழுப்பக் கூடிய கமக சங்கதிகளை, இதன் வழியாகவும் எழுப்ப முடிந்தது. விசைப்பலகைகளில், அதற்கு முன் இருந்திராத ஒரு அபூர்வ வசதி இது.
கடந்த, 1983ல் வெளிவந்த, 'மண் வாசனை' படப்பாடலான 'பொத்தி வச்ச மல்லிக மொட்டு' என்ற பாடலின் துவக்கத்திலேயே, மின்னணு விசைப்பலகை மூலம் எழுப்பப்பட்ட கமகங்களை நாம் கேட்கலாம்.
அதற்கும் முன்பே, 1980ல் வெளியான, 'நிழல்கள்' படத்தின் 'பொன்மாலை பொழுது' பாடலிலும், இதை இளையராஜா அழகாகப் பயன்படுத்தியிருந்தார். மின்னணு விசைப்பலகைகளின் வருகை, பிற்காலத்தில் திரையிசையில் நிகழ இருந்த பல உருமாற்றங்களுக்கு, அச்சாரமாக அமைந்தது.
இசையை உருவாக்குவதில் மட்டுமல்ல, திரை இசையையே புரட்டிப் போட்டு மாற்றங்களை நிகழ்த்திய விதத்திலும், அவை ஒரு புதிய வரலாற்றை உருவாக்கி விட்டன.

Comments