லய பரம்பரையின் உச்சம் பழனி முத்தையா பிள்ளை!

- லலிதாராம் - எழுத்தாளர் -
25th Dec, 2014

புதுக்கோட்டை லய பரம்பரையை, உயரங்களுக்கு இட்டுச் சென்றோர் வரிசையில், பழனி முத்தையா பிள்ளைக்கும் (1868 - -1945) ஒரு முக்கிய இடம் உண்டு.

பழனி முத்தையா பிள்ளை!
''பரம்பரை கலையான தவில் வாசிப்பை கற்றதோடு, இளம் வயதில் பழனி (கடம்) கிருஷ்ணரிடம், வாய்ப்பாட்டும் கற்றார்,'' என்று, பி.எம்.சுந்தரம் எழுதிஉள்ளார்.
இளம் வயதில் தவிலில் நல்ல தேர்ச்சியை அடைந்தபோதும், அந்தத் துறையில் நிபுணராக வேண்டி புதுக்கோட்டை, மான்பூண்டியா பிள்ளையிடம், குருகுல வாசம் மேற்கொண்டார். ''எந்த வித்வான் தலையால் போட்ட லய முடிச்சையும், முத்தையா பிள்ளை, காலால் அவிழ்த்து விடுவார். ஆனால், முத்தையா பிள்ளை காலால் போட்ட முடிச்சை, தலையால் அவிழ்ப்பதே, முடியாத காரியம்,'' என்றொரு, சொலவடை உண்டு.
முத்தையா பிள்ளையின் குருகுலவாசத்தின் போது, ஒருநாள், புதுக்கோட்டையில் மதுரை பொன்னுசாமி நாயனக்காரரின் கச்சேரி ஏற்பாடாகியிருந்தது. அவருக்கு வழக்கமாய் வாசிக்கும் தவில்காரர், திடீரென்று வர முடியாமல் போனது. உடன் வாசிக்க ஆளில்லாமல் தவித்தபோது, முத்தையா பிள்ளையை பயன்படுத்திக் கொள்ளும்படி, மான்பூண்டியா பிள்ளை, சிபாரிசு செய்தார்.
ஓர் இளைஞர், தனக்கு ஈடுகொடுத்து வாசிக்க முடியுமா என்று, முதலில் பொன்னுசாமி பிள்ளை தயங்கினாலும், அந்த யோசனைக்கு இசைந்தார். அன்று கச்சேரியில், முத்தையா பிள்ளை யின் வாசிப்பைக் கேட்டதும், பெரிதும் பாராட்டி, அதன் பின், பல கச்சேரிகளில் சேர்த்துக் கொண்டார்.
''அந்தக் காலத்தில், பல்லவி கள் பலநேரம் கைகலப்பில் முடிந்து விடுவதுண்டு. சிதம்பரம் வைத்தியநாத பிள்ளையின் கச்சேரிகள் போலீஸ் பந்தோபஸ்துடன் கூட நடந்திருக்கின்றன. அப்படிப்பட்ட வருக்கு வாசிக்கத் தோதான ஆள் என்றே முத்தையா பிள்ளையை அழைத்து வந்தனர்,'' என்று, வீணை தனம்மாள் பேரன், த.சங்கரன், ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.
நாயினா பிள்ளை, தன் மனதிற்குகந்த மிருதங்கக் கலைஞரான முத்தையா பிள்ளையையே, பிற்காலத்தில் சம்பந்தி ஆக்கிக் கொண்டார். அவரது மகள் நீலாயதாட்சியை, முத்தையா பிள்ளையின் மூத்த மகனான, நாகேஸ்வரனுக்கு மணம் செய்வித்தார். முத்தையா பிள்ளையின் இரண்டாவது மகனே, முழவிசையின் உயரங்களைத் தொட்ட, பழனி சுப்ரமணியபிள்ளை.
முத்தையா பிள்ளையின் லய குறிப்புகள், ஒரு நோட்டுப் புத்தகத்தில் பதிவாகி இருந்ததாகத் தெரியவருகிறது. 1973-ல் முத்தையா பிள்ளையின் இளைய மகன் சவுந்திரபாண்டியன், மியூசிக் அகாடமியில், இந்த நோட்டுப் புத்தகத்தைப் பற்றி பேசியுள்ளார். திண்ணியம் வெங்கடராம ஐயர், ''இந்த நோட்டுப் புத்தகத்தை பதிப்பிக்க வேண்டும்,'' என்று சொல்லி இருப்பதைத் தவிர, வேறொரு குறிப்பும், அந்த நிகழ்வைப் பற்றி கிடைக்கவில்லை.
பல ஆண்டுகள், தன் குருநாதருக்குத் துணையாக இருந்து வந்த முத்தையா பிள்ளையின் கடைசி ஆசை, அநேகமாய் மான்பூண்டியா பிள்ளைக்கு சமாதி கோவில் எழுப்புவதாகத்தான் இருந்திருக்க வேண்டும். பழனி சுப்ரமணிய பிள்ளையின் பெரும் முயற்சியால், இந்தக் கோவில் 1945-ல் எழுப்பப்பட்டது.

Comments