மொழிக்கும், அறிவுக்கும் அப்பாற்பட்டது இசை!

- தேவேந்திர பூபதி - கவிஞர் -
25th Dec, 2014

இசை மூன்று வயதிலேயே, என் வாழ்வில் நுழைந்தது. பழனி தேவஸ்தானத்தில், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாரம், திருவாசகம், மார்கழி மாதத்தில், திருவெம்பாவை பயிற்றுவிக்கப்படும்.

நான் சிறுவனாக இருந்தபோது, என் பெற்றோர், என்னை தமிழிசை வகுப்புக்கு அனுப்பினர். அங்கு, மீனாட்சிசுந்தர ஓதுவாரும், சண்முக சுந்தர தேசிகரும் பாடினால், மெய்மறந்து கேட்டுக் கொண்டே இருக்கலாம். அந்தக் குரல்களில், அப்படி ஒரு வசீகரம் இருந்தது.
அந்தக் குரல்கள் தான், தமிழிசை கண்டு மிரண்டு ஓடாமல், அப்பாவின் விரல்களை பிடித்துக் கொண்டு, அருவியில் குளிக்கச் செல்வது மாதிரியான அனுபவத்தை கொடுத்தது. அன்று துவங்கிய தமிழிசை ஆர்வம், இன்று வரை துளியளவும் குறையவில்லை. தினந்தோறும் இசையோடு வாழ்ந்து வருகிறேன். கர்நாடக இசை என்பது, தமிழிசை யின் மறுவடிவம். சிந்து பைரவி, தேஸ், காந்தாரம், தர்பாரி, சண்முக ப்ரியா, கரஹரப்ரியா போன்ற ராகங்கள் எல்லாம், தமிழிசையின் பண்ணிலிருந்தே உருவாகியவை.
இன்றுள்ள கச்சேரிகளில், கர்நாடக இசைக் கலைஞர்கள், தமிழிசையை மனோதர்மத்தோடு பாடினால், அனைத்து மேடைகளிலும்,
தேமதுர தமிழிசை, நம் செவிகளில் பாயும். இன்றைய கர்நாடக இசை உலகில், தமிழிசை பாடல்கள், துக்கடாவாகப் பாடப்படுகின்றன. காய்கறிகள் வாங்கும்போது, இலவசமாக கொடுக்கப்படும் கறிவேப்பிலை, கொத்தமல்லி மாதிரி, தமிழிசை பாடப்படுகிறது. இது, முற்றிலும் தவறு. இசையால், மொழியை அவமானப் படுத்துவதையும், மொழியால் இசையை அவமானப்படுத்துவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது; ஏற்றுக் கொள்ளவும் கூடாது.
இசை என்பது, மொழிக்கு அப்பாற்பட்டது; அறிவு நிலை கடந்தது. 'காணி நிலம் வேண்டும், பாயும் ஒளி நீ எனக்கு, துன்பம் நேர்கையில்' போன்ற பாடல்களை, சிறந்த மனோதர்மத்தில் பாடினால், கேட்போர் உள்ளம், கரைந்து விடும். அந்த அளவுக்கு, நம்மை வசியப்படுத்தும் சூட்சுமம், தமிழிசைக்கு உண்டு. சஞ்சய் சுப்பிரமணியன், டி.எம்.கிருஷ்ணா, நெய்வேலி சந்தான கோபாலன், சூரிய பிரகாஷ், பாம்பே ஜெயஸ்ரீ, அருணா சாய்ராம் போன்றோரின் தமிழிசையை கேட்பது, வரம்.
தெருவெல்லாம் தமிழிசை சென்றடைய வேண்டும் என்பது தான், எங்களின் விருப்பம். அதனால் தான், நவம்பர், டிசம்பர் மாதங்களிலும், எங்கள் தந்தையின் நினைவு தினத்தை முன்னிட்டும், மதுரையில், எங்களின் 'கடவு' அமைப்பும் 'ராகப்ரியா' இசை மன்றத்தோடு இணைந்து, ஆண்டுதோறும் தமிழிசை நிகழ்ச்சி நடத்தி வருகிறோம்.
அனைத்து இசையும் பாமரர் களுக்கும் சென்று சேரும் வகையில், புதிய மாற்றங்களை கொண்டுவர வேண்டும். மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். தமிழிசை மூவர்களும், நாயன்மார்களும் வளர்த்த தமிழிசையை, அனைவரும் கேட்கும் வகையில், ஒவ்வொரு இசை நிகழ்ச்சியிலும் வழங்கினால், உண்மையிலேயே தமிழிசையும், தமிழும் மேம்படும்.

Comments