'மிடி'யால் கட்டமைக்கப்படும் தமிழ் திரை இசை

- திவாகர் சுப்பிரமணியம் - (நிறுவனர், ஸ்கூல் ஆப் இண்டியன் பிலிம் மியூசிக்) -
25th Dec, 2014

கடந்த, 1980களின் துவக்கத்தில், மின்னணு விசைப் பலகைகளின் தாக்கம், தமிழ் திரையிசையில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தின.

பல்வேறு நிறுவனங்கள் உருவாக்கிய, மின்னணு விசைப் பலகைகள் ஒவ்வொன்றும், வெவ்வேறு மாறுபட்ட ஓசைகளை கொண்டிருந்தன. பலதரப்பட்ட இசை வகைகளுக்காக, இசைக் கலைஞர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட மின்னணு விசைப் பலகைகளை ஒரே நேரத்தில் வாசிக்க வேண்டிஇருந்தது. அது நடைமுறையில் சில சிக்கல்களைக் கொண்டுஇருந்தன.
கடந்த, 1982இல், இந்தப் பிரச்னைக்கு, 'மிடி' (எம்.ஐ.டி.ஐ.,) என்னும் கணினித் தொழில்நுட்பத்தின் மூலம் தீர்வு கிடைத்தது. வெவ்வேறு மின்னணு, கணினித் தொழில்நுட்ப இசைக்கருவிகளை எளிதாய் ஒருங்கிணைக்க, 'மிடி'யால் முடிந்தது. 'மிடி'யின் மூலம் இசையின் பல கூறுகளைத் தொகுத்து அமைக்கலாம். கொஞ்சம் விரிவாகப் பார்த்தால், சுருதி, காலப்பிரமாணம், ஒலிஅளவு, கமகம் போன்ற பல கூறுகளையும் தனித்தோ ஒருங்கிணைத்தோ பதிவு செய்துவிட்டு, பின்பு, தேவைக்கேற்ப எப்போது வேண்டுமானாலும் மீண்டும் ஒலிக்க வைக்கலாம். ஒழுங்கு செய்யலாம். பதிவு செய்த இசை யின் சுருதியை, ஒலியை, காலப்பிரமாணத்தை கற்பனைக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கலாம்.
'மிடி' தொகுப்பு (மிடி சீக்வென்சிங்) என்றாலே, முதலில் நம் நினைவுக்கு வருவது, ௧௯௮௬ல் வெளியான, புன்னகை மன்னன் படத்தில் இடம்பெற்ற, 'கால காலமாக வாழும்' என்ற பாடலே. இந்த பாடலில் வரும் இசைக்கோர்வைகள், அதுவரை நாம் கேட்டிராத உச்சபட்ச ஒலித்துல்லியத்தை, லய கச்சிதத்தை கொண்டிருந்தன.
இசை கலைஞர்கள், 'மிடி'யின் மூலம், முதலில் தாளம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மட்டுமே தொகுத்தனர். அதன் பின்புதான், சுருதி சார்ந்த ஒலிகளையும் தொகுக்க ஆரம்பித்தனர். ௧௯௮௭ல் வெளியான, நாயகன் படத்தில் இடம்பெற்ற, 'நிலா அது வானத்து மேலே' என்ற பாடல், இதற்கு ஒரு சரியான உதாரணம்.
'மிடி' தொழில்நுட்பம், ஒலியின் துல்லியத்தை மேம்படுத்தியதோடு மட்டுமல்லாமல், இசையின் பல கூறுகளையும் மேம்படுத்தின.
உதாரணமாக, கீழ்காலத்தில் வாசிக்கப்பட்ட இசை தொகுப்பினை, துரித காலத்துக்கு மாற்றி அமைக்க சாத்தியப்பட்டது. அது இசைக் கலைஞனின் தளங்களை யும் தரத்தையும் விரிவுபடுத்தியது.
விசைப் பலகை நிரலர் (கீ போர்டு புரோகிராமர்) மற்றும் தாள நிரலர் (ரிதம் புரோகிராமர்) என்ற புதிய கலைப் பாத்திரங்களை திரை இசைக்குள் 'மிடி' அறிமுகப்படுத்தியது. அதன் காலச்சீரற்ற செயல்பாட்டு வழி, கணினியில் வார்த்தை கோப்புகளை சுலபமாக மாற்றி அமைப்பது போல், மாற்றங்களை செய்ய ஏதுவாகின. மொத்தத்தில் 'மிடி' திரை இசைத் துறைக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.

Comments