இந்திய கலைகளை சென்னைக்கு கொண்டு வந்த ராகவன்!

- லலிதாராம் - எழுத்தாளர் -
26th Dec, 2014

சங்கீதம் தழைக்க, கலைஞர் அல்லாதவரின் பங்களிப்பும் தேவைப்படுவது உண்டு. அவர்களைப் பற்றி நினைக்கையில் முதலில் நினைவுக்கு வருபவர், வே.ராகவன்.

வே. ராகவன்
ஐம்பது ஆண்டு காலத்துக்கு சங்கீதம், நாட்டியம், நாடகம் தொடர்பாக ஆங்கிலத்திலும், தமிழிலும் எண்ணற்ற கட்டுரைகளை எழுதி இசைத் துறைக்கு செறிவைச் சேர்த்தவர் டாக்டர் ராகவன். 1930-களில், நூலகங்களில் மட்டுமே இருந்த, அச்சில் வராத சங்கீத நாட்டிய சம்பந்தமான புத்தகங்களை, முதன் முதலில் அறிமுகம் செய்வித்த பெருமை, இவரையே சேரும். சங்கீத மும்மூர்த்திகளைப் பற்றி, எவ்வளவோ பேர் எழுதியிருப்பினும், 50 ஆண்டுகளுக்கு முன் இவர் எழுதிய கட்டுரைகளுக்கு இணையாக, அதற்கு முன்னோ, பின்னோ எதையும் கூற முடியாது.
ராமகிருஷ்ண மடம் வெளியீடாகக் கிடைக்கும் 'ஸ்பிரிச்சுவல் ஹெரிடேஜ் ஆப் தியாகராஜா' என்ற புத்தகம், பல பதிப்புகளை கண்டிருக்கிறது. பாரதி ஏன் தியாகராஜரை 'ரசக் கடல்' என்கிறான் என்பதை, இந்தப் புத்தகத்தைப் படித்தால் நன்குணரலாம். சரணாகதி தத்துவத்தைத் தவிர, அழகான உவமைகள், நிந்தா ஸ்துதியில் அமைந்த பாடல்கள், போலித்தனத்தை சாடும் சாட்டையடிப் பாடல்கள், பிரம்மானந்த அனுபவத்தைப் பறை சாற்றும் அற்புத ரசம் ததும்பும் பாடல்கள் என்று, டாக்டர் ராகவனின் அலசல், பல கோணங்களில், தியாகராஜரின் கிருதிகளை ரசிக்க உதவுகிறது.
முத்துஸ்வாமி தீட்சிதரைப் பற்றி ராகவனின் எண்ணற்ற கட்டுரைகள் கிடைக்கின்றன. ஊர் ஊராய்ப் போய்ப் பாடிய நாயன்மார்களோடும், ஆழ்வார்களோடும் தீட்சிதரை ஒப்பிட்டு, அவர் பல்வேறு இடங்களில் பாடியிருக்கும் கிருதிகளை அழகுற விளக்கியுள்ள விதம் மிகவும் ரசிக்கத்தக்கது. தீட்சிதரின் கிருதிகளை, சங்கீத மாக மட்டுமின்றி, ஆகமங்கள், ஸ்தல புராணங்கள், வழிபாட்டு முறைகள் போன்றவற்றை எடுத்துக் கூறும் கருவூலமாகவும் காணலாம் என்ற பார்வையை, முதன் முதலில் வைத்தவர் ராகவன் தான்.
சியாமா சாஸ்திரியின் கீர்த்தனங்களில் பெரும் ஈடுபாடு கொண்டு இருந்த ராகவன், அவரது 'நமோஸ்துதே' என்ற கிருதியைக் கவனம் செய்துள்ளார். அகாடமி கருத்தரங்கில் கர்நாடக இசை மட்டுமின்றி, இந்துஸ்தானி இசை பற்றியும் பல விவாதங்களுக்கு வழி வகுத்தார். அசாம் மாநில கிராமிய இசை, ஒடிசாவின் நடனமான ஒடிசி, என்று இந்தியாவின் பல்வேறு கலைகளை சென்னைக்குக் கொண்டு வந்த பெருமை ராகவனையே சேரும்.
இந்தியாவின் சார்பாக பல நாடுகளுக்குச் சென்று, நம் இசையைப் பற்றியும் நாட்டியத்தைப் பற்றியும் பல கட்டுரைகள் வாசித்த ராகவன், மேற்கத்தியவரை அகாடமிக்கு அழைத்து, இந்தியாவுக்கு உலக இசை வடிவங்களை அறிமுகப்படுத்துவதிலும் பெரும்பங்கு ஆற்றி உள்ளார். ஐம்பது ஆண்டுகளுக்கு, அகாடமி என்றால் அது ராகவன்தான் என்ற நிலை இருந்தது. இன்றும், மார்கழி இசை விழாவில் அகாடமியின் காலைவேளை கருத்தரங்க நிகழ்ச்சி களுக்குச் செல்லும் போது, ராகவனின் ஆன்மா, அங்கிருக்கும் அவரது அழகிய உருவப்படத்தின் வழியாக நிகழ்வுகளைக் கவனித்தபடிதான் இருக்கும்.

Comments