சாதாரண மக்களையும் ஈர்த்த கர்நாடக இசை!

- கவுதம நீலாம்பரன் - எழுத்தாளர் -
26th Dec, 2014

ஆலயங்களில் பணி செய்யும் குடும்பம் எங்களுடையது. விருத்தாசலத்தை அடுத்து உள்ள சிற்றூர் சாத்துக்கூடல். அங்கே என் பெரிய அக்கா, ஒன்றரை வயதுக் குழந்தையான என்னைத் தூக்கிச் சென்று வளர்த்தார். என் மாமா சங்கீத நாட்டம் உடையவர். வீட்டில் ஆர்மோனியம், பிடில், புல்லாங்குழல் இருக்கும்.

மாமா, நன்கு புல்லாங்குழல் வாசிப்பார். என் அழுகையை நிறுத்த, என்னை உறங்க வைக்க அவர் இசையைத் தான் கையாள்வார். பல சமயங்களில் அவர் என்னை மடி மீது கிடத்தி, 'தீதி... தீதி...' என்று, இசை தாலாட்டுடன், ஸ்வர ஆலாபனை செய்வார். அப்படியே கண்ணுறங்கிப் போவேன். இசைப் பயிற்சி ஏதும் நான் பெறவில்லை. நான் சங்கீத விற்பன்னனும் இல்லை. எனினும், இசை தான் என்னை வளர்த்தது. வறுமை, ஏழ்மை, பல்வேறு துக்கங்கள் நிரம்பிய பதின் பருவத்தில் இசையே, எனக்கும் எங்கள் குடும்பத்திற்கும் ஆறுதல் அளித்தது.
மாமாவின் நண்பர் ராமலிங்கம் பிள்ளை, கோவில் மண்டபத்தில் வந்து வயலின் வாசிப்பார். பசி மறந்து அதில் சொக்கிப் போய் கிடப்பேன். சுவாமிக்கு மாலை தொடுக்கும் பழுவூர்ப் பிள்ளை, அப்படியே கண்மூடி, மெய்மறந்து போவார். அந்த நாட்களில், வானொலி தான் ஊருக்கே ஹீரோ. அதைத் திறந்தால், பெரும்பாலும் கர்நாடக இசை தான் ஒலிக்கும். அதுவும் திருவையாறு தியாகப் பிரம்ம இசை மகோற்சவம் நிகழும் நாட்களில் ஊரே வானொலி முன் தான் பழிகிடக்கும். இப்போது, 'டிவி' சீரியல்களில், கட்டுண்டு கிடக்கும் தாய்க்குலத்தின் பழைய தலைமுறை, இசையில் ஈடுபட்டு நிம்மதி கண்டது. வானொலியும் ஒன்றிரண்டு வீடுகளில் தான் உண்டு என்பதால், அங்கெல்லாம் உறவும், நட்பும் நெருங்கிக் கிடந்து அன்னியோன்யம் இழையும்.
'ஆஹா கல்யாணி! மோகனம் அற்புதம்! இது ஆனந்த பைரவி! மாயாமாளவகவுளை!' என்று சாதாரண ஜனங்களும் ராகங்களின் பெயர் கூறி, ஆலாபனைகளில் ஆனந்தமாக ஈடுபடுவர். செம்மங்குடி, அரியக்குடி, செம்பை என்று பல பெயர்களை, அனாயாசமாக உச்சரிப்பர்.
திருநாட்களில் சுவாமி பல்லக்கின் முன், நாதஸ்வரம் வாசிப்பதைக் கேட்கும் விளக்குத் தூக்கிகள் (கேஸ் லைட்) மற்றும் பாமர ஜனங்கள் உட்பட, 'மல்லாரி, நாட்டைக்குறிஞ்சி' என்று ராகங்களை கூறி மகிழ்வதோடு, சில பாடல்களை நேயர் விருப்பம் போல் கூறி, வாசிக்க வேண்டுவர். வித்வான்களும் வாசிப்பர். தெருவெல்லாம் இசைத்தென்றல் வீசிய அந்த நாட்களை, என்னால் மறக்கவே இயலாது.
நாவல்கள் வாசிக்கத் துவங்கிய போது, மீ.ப.சோமுவின், 'கடல் கொண்ட கனவு' சரித்திர நாவலில், ஒரு தீவின் பாறைகளில் உள்ள துளைகளில் காற்று புகுந்து, சங்கீத ஜாலங்கள் நிகழ்த்துவதை வர்ணிப்பது மனம் தொட்டது.
அவரது, 'ரவிச்சந்திரிகா' நவீனத்தில், இசையும் நாட்டியமும் ஒளிரும். கொத்தமங்கலம் சுப்புவின், 'தில்லானா மோகனாம்பாள்' நவீனம் இசை மற்றும் நாட்டியப் பெருமைக்கான அழுத்தமான இலக்கியப் பதிவு எனலாம். நூற்றுக்கணக்கில் படைப்புகள் யாத்து, இன்று ஓர் எழுத்தாள வடிவம் பெற்றுத் திகழ்ந்தாலும், இசை ரசிகன் என்பதே என் மன பிம்பமாக நான் என்றும் உணர்கிறேன். ஜீவவீணையை மீட்டுகிற எல்லாவித இசைக்கும் நான் அடிமை, என்பதே நிஜம்.

Comments