தமிழ் திரை பாடலில் கேட்கும் சர்வதேச ஒலிகள்

- திவாகர் சுப்பிரமணியம் - (நிறுவனர், ஸ்கூல் ஆப் இண்டியன் பிலிம் மியூசிக்) -
26th Dec, 2014

சுருதி, லயம், பாவம் என்ற மூன்று அங்கங்களும் ஒருங்கிணைந்து ஒலிப்பதே இசை. ஆனால், திரை இசைக்கோ, இசைக்கருவிகளின் ஒலிவகைகளும் முக்கியமானது. இசையை பாராட்டுவது என்பது, தமிழர்களுக்கு இயல்பு.

எனினும், ஒலிவகைப்பாடுகளின் முக்கியத்துவத்தை அவர்கள் முழுமையாக அறிந்திருக்கவில்லை. அதை அவர்கள் ஒரு கட்டத்தில் உணர ஆரம்பித்ததற்கு, மின்னணு விசைப் பலகைகளே முதல் காரணம் என்றால் அது மிகையல்ல. மின்னணு இசைத் தொழில்நுட்பத்தின் ஆரம்ப கட்டத்தில், விசைப்பலகை, தமிழ் திரை இசைக்குழுவின் முக்கிய பகுதியாக இருந்தது. இவற்றிலிருந்து ஒலித்த ஓசைகள், பெரும்பாலும் இணைப்புருவாக்கத்தில் (சிந்தசைஸ்டு) எழுப்பப்பட்ட ஓசைகளாகவே இருந்தன. ஆனால், டிஜிட்டல் இசைத் தொழில்நுட்பங்களின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்குப்பின், இந்த நிலைமை சற்றே மாற துவங்கியது.
டிஜிட்டல் மாதிரி எடுத்தல் தொழில்நுட்பம் (டிஜிட்டல் சாம்பிளிங் டெக்னாலஜி), அந்த மாற்றத்தின் மையப்புள்ளி. இதன் மூலம், பதிவு செய்த ஒலியை, எண்ணியல் மூலமாக விசைப்பலகையில் இயங்க வைக்க முடியும். அதுமட்டுமல்ல, வெவ்வேறு முறைகளில் அந்த ஒலியை பதியம் செய்து, பின், கையாள்வதற்கும் இந்த தொழில்நுட்பம் இடம் தருகிறது. மேலும், ஒரு முறை ஒலிப்பதிவு செய்யப்பட்ட இசைக்கருவியின் ஓசையை, எண்ணற்ற வழிகளில் மறுபடியும் பயன்படுத்தலாம். 80களின் பிற்பகுதியில், புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் வாசித்து தயார் செய்த டிஜிட்டல் மாதிரி எடுத்த (டிஜிட்டல் சாம்பிளிங்) ஒலித்தட்டுகள் வெளிவந்தன.
முதலில் டிரம்ஸ், பியானோ, வயலின் போன்ற மேற்கத்திய இசைக்கருவிகளின் டிஜிட்டல் மட்டுமே வெளியிடப்பட்டன. நாளடைவில், உலகின் மற்ற இசை கலாச்சாரங்களின் பிரதான இசைக்கருவிகளின் ஒலிகளும் கிடைக்கத் துவங்கின. இன்றோ, பல அயல் நாடுகளின், கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இசைக்கருவிகளின் ஒலிகளும் நமக்கு கிடைக்கின்றன. இந்த தொழில்நுட்பத்தின் தாக்கம், தமிழ் திரைப் பாடல்களில் தொடர்ச்சியாக பிரதிபலித்து வருகிறது. உதாரணத்திற்கு, 'இந்தியன்' (1996) படத்தின், 'அக்கடான்னு நாங்க' பாடலில், ஒரு சீன இசைக்குரலை நாம் கேட்கலாம்.
வெளிநாட்டு இசைக் கருவிகள் மட்டுமின்றி, நாதஸ்வரம், சித்தார், வீணை, தவில், தபேலா, மிருதங்கம், தப்பட்டை போன்ற நம் நாட்டு இசைக்கருவிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. 'திருநெல்வேலி அல்வாடா' என்ற 'சாமி' (2003) திரைப்படப் பாடலில், டிஜிட்டல் மாதிரி எடுத்தல் தொழில் நுட்பத்தால் வடிவமைக்கப்பட்ட தமிழ் நாட்டு கிராமிய தாள வாத்தியங்கள் ஒலிக்கின்றன. இவற்றை, இசை நுட்பத்தில் தோய்ந்த காதுகளால் வேறுபடுத்தி உணர முடியும். இந்த எண்ணியல் மாதிரி எடுத்தல், இசைத் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியை சார்ந்த முக்கியமான மைல் கல்.

Comments