தமிழில் திரைப்பட பாடல்கள் எப்படி உருவாகின்றன?

- திவாகர் சுப்பிரமணியம் - (நிறுவனர், ஸ்கூல் ஆப் இண்டியன் பிலிம் மியூசிக்) -
28th Dec, 2014

ஒரு இசையமைப்பாளன் மனதில் மட்டுமே கற்பனை செய்யப்படுகிற பாடல், எப்படி பலகட்டங்களைத் தாண்டி ஒலிவடிவம் பெறுகிறது என்பது, சுவாரசியமான விஷயம்.

தமிழ்த் திரை உலகில், இந்த செயல்பாடுகள், காலத்திற்கேற்ப மாறிவந்துள்ளன. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த செயல்பாட்டைப் பார்த்தால், இசையமைப்பாளர், இசைக் குழு நடத்துனரிடம் (மியூசிக் கண்டக்டர்), பாடல் சம்பந்தப்பட்ட இசைக் குறிப்புகளை முதலில் சொல்வார். அவர், அந்த குறிப்புகளை புரிந்துகொண்டு, ஒவ்வொரு இசைக் கருவிக்குமான குறிப்புகளை, சம்பந்தப்பட்ட இசைக் கலைஞரிடம், தனித்தனியே பகிர்ந்து கொள்வார். பின், திரை இசைக்குழு, பாடகர்கள் உட்பட, அவர்கள் மொத்தமாக ஒருங்கிணைந்து, பலமுறை ஒத்திகை பார்த்து, பாடலை உருவாக்குவர்.
இசையமைப்பாளர் திருப்திஅடைந்த பின், பலவிதமான ஒலிவாங்கிகள் மூலம், ஒலிப்பதிவுக் கூடத்தில் பாடல் வாசித்துப் பதிவு செய்யப்படும். பதிவு செய்த பாடலை, ஒலிப்பொறியாளர், ஓசை மேம்பாடு சம்பந்தப்பட்ட தொழில்நுட்பங்களை கையாண்டு, பாடல் வெளியீட்டுக்கு தயார் செய்வார்.
இன்றோ, திரைப்பாடலின் உருவாக்கம் பன்மடங்கு எளிமையடைந்துள்ளது. முதலில், பாடல் சம்பந்தப்பட்ட முக்கியக் கூறுகளை, இசையமைப்பாளரே, கணினி தொழில்நுட்பம் மூலம் தொகுத்தமைக்கிறார். வாத்திய இசைக் கலைஞர்கள், தனித்தனியே ஒலிப்பதிவு கூடத்திற்கு அழைக்கப்பட்டு, தொகுத்தமைக்கப்பட்ட இசைக்கேற்ப, அவர்கள் வாசிப்பு பதிவு செய்யப்படுகிறது. ஒலிப்பதிவு செய்யப்பட்ட மற்றும் கணினி தொழில்நுட்பத்தால் தொகுக்கப்பட்ட இசைக்கூறுகளை, ஒலிக்கலவைப் பொறியாளர், பல்வேறு கணினி செயல்பாட்டு முறைகளால் துல்லியப்படுத்துகிறார்; பின் மேம்படுத்துகிறார். கடைசியில் இசை வெளியீட்டுக்கும் அவரே அதைத் தயார் செய்கிறார்.
இதில் சில பலன்கள் உண்டு. பெரும்பாலான இசைக் கருவிகளை கணினி மூலமாக இயக்குவது, வர்த்தக ரீதியான பலன். இசைக் கலைஞர்கள் எல்லோரும் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் செயல்படவேண்டிய அவசியம் இல்லாதது, செயல்முறை சார்ந்த பலன்.
இப்படி, நவீன செயல்பாட்டு முறைகளை கையாள்வதன் மூலம், சில நன்மைகள் இருந்தாலும், சில இழப்புகளையும் நாம் சந்திக்க வேண்டியிருக்கிறது. இசைக் கலைஞர்கள் தனித்தனியே செயல்படுவதால், அவர்கள் ஒருங்கிணைந்து செயல்படும்போது இயல்பான மனவெழுச்சி யில் ஏற்படும் உற்சாக இசை குறிப்புகளை இன்று காணமுடியவில்லை. மனித செயல்திறன் சார்ந்த, இசை உணர்வுகளின் இழப்பும் தவிர்க்க முடியாத ஒரு பின்விளைவு.
தமிழ் திரைப் பாடல்கள் உருமாற்றத்திற்கு, கணினி தொழில்நுட்பம் மட்டுமே தனித்த ஒரு காரணி இல்லை. ஆனால், அவற்றின் கணினித் தொழில்நுட்ப ஆதிக்கம், அடிப்படை காரணமாக விளங்குகிறது.

Comments