மிருதங்கத்தை படைத்த பர்லாந்து பெர்னாண்டஸ்!

- லலிதாராம் - எழுத்தாளர் -
29th Dec, 2014

இசைக் கருவிகளை வாசித்தவர்களைத் தெரியும் அளவுக்கு, அவற்றை செய்தவர்களைப் பற்றி, அதிகம் வெளியில் தெரிவதில்லை.

பர்லாந்து பெர்னாண்டஸ்
மரத்தின் கனியின்மீது கவனம் செல்லும் அளவிற்கு, வேரின் மீது, கவனம் செல்லாது என்பதுதான், நடைமுறை. இருப்பினும், ஒருசிலரின் திறன், நடைமுறை வழக்கங்களையும் மீறி, வெளிச்சத்துக்கு வந்துவிடும். அப்படிப்பட்ட அரிய மிருதங்க வினைஞர்தான்,
பர்லாந்து.
சங்கீத கலாநிதி டி.கே.மூர்த்தி,''நாங்க இன்னிக்கு வேளாவேளைக்கு சாப்பிடறோம்-னா, அதுக்கு இவங்களை மாதிரி மிருதங்க வேலை செஞ்சு தரவங்களும் தான் காரணம்,'' என்று உருக்கமாய் கூறியது, அன்று அந்த அரங்கில் இருந்தவர்களை நெகிழ வைத்தது.
மிருதங்க உலகின் அரசர்கள் என்று கருதப்படும் பாலக்காடு மணி அய்யர், பழனி சுப்ரமண்ய பிள்ளை - இருவருக்கும் மிருதங்கம் செய்து கொடுத்தவர் பர்லாந்து என்கிற பெர்னாண்டஸ் -தான்.
தலித் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த, பர்லாந்தின் பரம்பரை, தஞ்சாவூரில் மிருதங்க வேலை செய்வதில், புகழ் பெற்றதாக விளங்கியது. புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளைக்கு, வெகுநாட்களாய் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த மிருதங்கத்தை, ஒரேநாளில் சரிப்படுத்திக் கொடுத்த இளவயது பர்லாந்தின் கைகளில், தெய்வீகத்தன்மை நிறைந்திருப்பதாக, தட்சிணாமூர்த்தி பிள்ளை கூறியுள்ளார்.
மிருதங்க மேதை மணி அய்யர்,''சொர்க்கம் என்றால், அது நல்ல சந்தன மரத்தில் சோமு ஆசாரி கடைந்து, பர்லாந்து வாத்தியத்தை மூட்டடித்து தயார் செய்து, அதில் அரியக்குடி ராமானுஜ அய்யங்காருக்கு வாசிக்க நேர்வதுதான்,'' என்று கூறியுள்ளார். பாலக்காட்டில் இருந்து மணி அய்யர் குடிபெயர்ந்து, தஞ்சாவூருக்கு வருவதற்கு முக்கிய காரணம், பர்லாந்தின் வேலைத் திறன்தான்.
எந்தப் பாடகருக்கு மிருதங்கம் என்று சொல்லிவிட்டால் போதும், அந்தப் பாடகருக்கு உரிய ஸ்ருதியில் மிருதங்கம் தயாராகிவிடும். மணி அய்யருக்கு கச்சேரியில் வாசிப்பதைவிட, மிருதங்கத்தில் ஆராய்ச்சி செய்வதில்தான் ஆர்வம் அதிகம். அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து சென்று, அவரது எண்ணங்களை எல்லாம் மிருதங்கங்களாக்கிய பர்லாந்தின் பெருமை, மணி அய்யரின் பெருமை உள்ள வரை நிலைத்திருக்கும்.
இன்றும் பர்லாந்தின் சந்ததியினர் சென்னையில் இருந்தபடி, அனைத்து முன்னணி வித்வான்களுக்கும் மிருதங்கம் தயார் செய்து கொடுக்கின்றனர். பர்லாந்தின் பெயரில், விருது ஒன்று நிறுவப்பட்டு ஒவ்வொரு ஆண்டும், ஒரு மிருதங்க வினைஞருக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

Comments