வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் மாற்றம் கண்ட ஒலிப்பதிவு கூடங்கள்!

- திவாகர் சுப்பிரமணியம் - (நிறுவனர், ஸ்கூல் ஆப் இண்டியன் பிலிம் மியூசிக்) -
29th Dec, 2014

ஒரு திரைப் பாடலின் சிறப்புக்கு, பல காரணங்கள் இருந்தாலும், இரண்டு விஷயங்கள் மிக முக்கியமானவை. ஒன்று, அதில் இடம்பெறும் இசையின் தன்மை. மற்றொன்று, அந்த இசையின் ஒலிப்புத் தன்மை.

இந்த இரண்டு தன்மைகளையும், மறைமுகமாகவும், நேரடியாகவும் பாதிப்பது, ஒலிப்பதிவுக் கூடம். ஒலிப்பதிவுக் கூடங்கள் பலதரப்பட்டவை. நிதிவசதி, இடப்பரப்பளவு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த வாய்ப்புகளுக்கு ஏற்ப அவை வேறுபடுகின்றன.
ஒலிப்பதிவுக் கூடம் வடிவமைக்கப்பட்ட விதமும், அதில் இயங்கும் தொழில்நுட்பங்களும், இவை இரண்டுக்குமிடையே உள்ள பரஸ்பர உறவும், ஒலித்தன்மையை நேரிடையாக பாதிக்கும்.
ஒலிப்பதிவாளர் மற்றும் ஒலிக்கலவைப் பொறியாளரின் தேர்ச்சி, போன்றவையும், பதிவு செய்யப்படும் இசையின் துல்லியத்தை பாதிக்கும். தமிழ் திரை இசைப் பாடல்களின் உருவாக்கத்தில், முக்கியமாக திகழும் ஒலிப்பதிவுக் கூடங்கள், சமீபகாலத்தில், பல பரிணாம மாற்றங்களை, வளர்ச்சிகளைக் கண்டுள்ளன. கடந்த காலத்தில், ஒலிப்பதிவுக் கூடங்கள் பெரிய பரப்பளவில், சினிமா கம்பெனிகளின் வளாகத்துக்குள் இருந்தன. அவற்றில், ஒலிக் கண்காணிப்பு அறை, செயல்திறன் அறைகள், மெட்டமைக்கும் (கம்போசிங்) அறை என, வெவ்வேறு அறைகள் இருந்தன. அதுமட்டுமல்லாமல், இசைக்குழு, உணவு அருந்தவும், இளைப்பாறவும், பெரிய அறைகளை கொண்டிருந்தன. மேலும், வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்கள், மரங்களடர்ந்த திறந்தவெளி என, மிக பிரமாண்டமாக அவைக் காட்சியளித்தன. ஒலிப்பதிவு சம்பந்தப்பட்ட கருவிகளோ, அளவில் பெரியதாய் இருந்தன.
உதாரணத்திற்கு, ஒலிக்கலவை மேஜையை (மிக்சிங் டெஸ்க்), அதன் பிரமாண்ட அளவின் காரணமாக, ஒருவரால் இயக்க முடியாது! ஏ.வி.எம்., ஸ்டுடியோ, பிரசாத் ஸ்டுடியோ, விஜயா கார்டன்ஸ், கோதண்டபாணி ஸ்டுடியோ போன்ற ஒலிப்பதிவுக் கூடங்கள், இதில் குறிப்பிடத்தக்கவை. நவீன ஒலிப்பதிவுக் கூடங்களோ, அளவில் சிறியதாகவும், தொழில்நுட்பத்தில் முன்னேறியதாகவும் இருக்கின்றன.
பெரும்பாலும் வீடுகளோ அல்லது வணிக வளாகத்தை சேர்ந்த ஒரு பகுதியோ, ஒலிப்பதிவுக் கூடங்களாக மாற்றி அமைக்கப்படுகின்றன. இவற்றில், அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று அறைகளை மட்டுமே காணலாம். இசையை கண்காணிக்க ஒரு அறையும், இசையை பதிவு செய்ய மற்றொரு அறையும் மட்டுமே இன்று, போதும்.
இதற்கு, இசைக் கலைஞர்களை, தனித்தனியே ஒலிப்பதிவு செய்யும் செயல்பாட்டு முறை உதவியாக இருக்கிறது. தொழில்நுட்பக் கருவிகளோ, கச்சிதமாகவும் நவீனமாகவும் காட்சியளிக்கின்றன. கணினி தொழில்நுட்பம் அளிக்கும் செயல்பாடு சார்ந்த சுதந்திரமே, ஒலிப்பதிவுக் கூடத்தின், இந்த பலவகை உருமாற்றங்களுக்கு முக்கிய காரணம்.இந்த உருமாற்றம், இன்றைய தமிழ் திரைப் பாடலின் வடிவத்திற்கு ஒரு காரணியாக மட்டுமின்றி, இசை வல்லுனர்களின் செயல்பாட்டுத் தளங்களையும் மாற்றியமைத்துள்ளது.

Comments