பள்ளியில் இசையை பாடமாக்க வேண்டும்!

- நட்ராஜ் - முன்னாள் டி.ஜி.பி., -
30th Dec, 2014

அப்பா உமாசந்திரனும், சித்தப்பா பூர்ணம் விஸ்வநாதனும், கர்நாடக சங்கீத பிரியர். மட்டுமின்றி, சினிமா துறையில் இருந்ததால், எப்போதும் சினிமா பாடல்களும், கர்நாடக சங்கீதமும் வீட்டில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

அன்றைய காலகட்டத்தில், வெளிவந்த பெரும்பான்மையான சினிமா பாடல்கள், கர்நாடக இசையை அடிப்படையாக கொண்டிருந்தன.
மியூசிக் அகாடமிக்கு அருகில் எங்கள் வீடு இருந்ததால், என் சகோதரிகள், அங்கு இசை பயில செல்வர். அவர்களோடு நானும் கலந்து கொள்வேன். அப்போதிருந்தே, இசை ஆர்வம் ஏற்பட்டது. பின்னாளில், தேர்வு எழுதி, அரசு அதிகாரியான பிறகும், சித்தூர் கோபாலகிருஷ்ணனிடம், வயலின் கற்றேன். இசை என்னை தொடர்ந்து கொண்டே வந்தது.
காவல்துறையில் பணிபுரிந்த போது, குற்றங்களை ஒடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எப்போதும், அதுகுறித்தே, சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஓய்வு நேரங்களில், இசை கேட்பேன். அது குற்றங்களை ஒடுக்க வேண்டிய செயல்பாடுகளில் முழுமையாக ஈடுபட, மன ஒருமுகத்தை கொடுத்தது. வாய்ப்பு இருக்கும் நேரங்களில் எல்லாம், இசைக் கச்சேரிக்கு செல்வேன். அது, என்னை மென்மேலும் மேன்மைப்படுத்தியது.
மேற்கத்திய பாரம்பரிய இசைக்கு, ஜெர்மனியில் உள்ள வியன்னா எப்படி தலைமையகமோ, அதேபோல, நம் பாரம்பரிய இசைக்கு, சென்னை தலைமையகம். சென்னையில் இருப்பதே, இசையோடு வாழ்வதற்கு சமம். கர்நாடக இசையை, பாடல்களின் வழியாக அடித்தட்டு மக்கள் வரை கொண்டு சென்றதில், சினிமாப் பாடல்களுக்கு முக்கிய பங்கு உண்டு. அதை மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் துவக்கி வைத்தார். பின்னாளில், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் போன்றோர், அதையே கையாண்டனர்.
இசை, மொழிகளை எல்லாம் கடந்தது; ஆனாலும், இசையை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில், மொழி முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, கர்நாடக சங்கீத மேடைகளில், அதிகளவில் தமிழிசை பாடல்களை பாட வேண்டும். அப்போதுதான், அந்த இசை அனைத்து மக்களையும் சென்றுஅடையும். மதுவந்தி, சுஜாவந்தி, ஜோன்புரி, ஜனசம்மோதினி போன்ற ராகங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இப்போதுள்ள பாடகர்களில், சஞ்சய் சுப்பிரமணியன் சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார். கிருபானந்த வாரியாரின் வார்த்தைகளில் இருக்கும் மாயவித்தை, சஞ்சயின் குரல்களில் இருக்கிறது; அது நம்மை மயக்கிடும்.
பெண்களில், பாம்பே ஜெயஸ்ரீ, மகதி, கடலுார் ஜனனி, ரஞ்சனி - காயத்ரி, தீபிகா ஆகியோரும், இளைய தலைமுறையில், சஞ்சித் நாராயணன், பரத் சுந்தர், சாகேத ராமன், திருச்சூர் சகோதரர்கள், மோகன் போன்றோர், அனை வரையும் கவரும் வகையில் பாடுகின்றனர்.
நான் சிறைத்துறையில், டி.ஜி.பி., ஆக இருந்த போது, அனைத்து மத்திய சிறைகளிலும், காலையில், ஒரு மணிநேரம், இசையை ஒலிபரப்ப செய்தேன்.
கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதன், புழல் சிறையில் இசைக் கச்சேரி நடத்தி உள்ளார். அது கைதிகளிடையே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. கர்நாடக சங்கீத உலகில், கலைஞர்கள் அதிகமாவது போல், கேட்போரும் அதிகமாக வேண்டும். அதற்கு, இசையை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
இசையில், இரண்டு வகை உண்டு, ஜனரஞ்சகமாக பாடுவது; இலக்கண சுத்தமாக பாடுவது. இவை இரண்டையும் இணைக்கும் வகையில் பாலம் அமைத்தால், மக்களை எளிய வகையில் இசை சென்றடையும். டி.எம்.கிருஷ்ணா வின் இசை தொடர்பான முயற்சி உயர்வானது. வெற்றியடைய வேண்டியது. அந்த முயற்சி வெற்றியடைய வேண்டும் எனில், பள்ளியில் இருந்தே, இசையை பாடமாக்க வேண்டும்.

Comments