நம் நரம்புகளில் இருக்கிறது பறையிசையின் ஆதி தாளம்

-அழகிய பெரியவன், எழுத்தாளர் -
19th Dec, 2014

என் தாத்தா, ஒரு கூத்துக் கலைஞர். சிறுவயதில் தாத்தா, கூத்து நடத்தச் சென்ற இடங்களில் எல்லாம், பறையிசை ஒலிக்கும். அந்த இசையில், நான் மெய்மறந்து போவேன். அப்படித் தான் எனக்கு பறையிசை அறிமுகமானது. பின், திரும்பும் திசை எல்லாம், பறையிசை கேட்டு வளர்ந்தவன் நான்.

பெரும் துயரம் மனதை அழுத்தும் போதெல்லாம், பறையிசை கேட்டால், உடனே அது காற்றில் பறந்து விடும். அந்தளவுக்கு, பறையிசை என் உயிரோடு கலந்துள்ளது. இசையோடு வாழ்ந்த தமிழர்கள், திணைக்கு ஒன்றாக பறையை பயன்படுத்தினர். குறிஞ்சிக்கு தொண்டகப் பறை, முல்லைக்கு ஏறுகோட்பறை, மருதத்துக்கு மணமுழவு பறை, நெய்தலுக்கு மீன்கோட்பறை, பாலைக்கு நிறைகோட்பறை என, ஐந்திணைக்கும் தனித்தனி பறைகள் இருந்துள்ளன.

சங்கத் தமிழர்கள், 79 வகையான தோல் கருவிகளை பயன்படுத்தி வந்துள்ளனர். அவை எல்லாம், பறையின் பல்வேறு வடிவங்கள். முரசும் ஒரு வகை பறை. பறையின் பெருமையை அறிவிக்க, தமிழ் மன்னர் தர்மபுத்திரன், தன் கொடியில், பறையை வைத்திருந்தான். வேட்டையாட, அறுவடை செய்ய, ஆநிரை கவர்தலை அறிவிக்க, வெற்றி தோல்வியை அறிவிக்க, பூஜை செய்ய, மரணத்தை அறிவிக்க என, எல்லாவற்றுக்கும் பறையை பயன்படுத்தியவர்கள் நாம்.

பிற்காலத்தில், அது, மரணத்தை அறிவிக்க மட்டுமான கருவியாக மாற்றப்பட்டது, துரதிர்ஷ்டம். அந்த காலத்தில், பறையிசை தனியிசையாக மட்டுமல்லாது, வளை, வயிர், வீணை, கோடி, துடி போன்ற இசைக் கருவிகளோடு சேர்த்து இசைக்கப்ட்டுள்ளது. அதை இப்போது கேட்க வேண்டும் என்ற ஆவல், இப்போது எனக்குள் துளிர் விட்டு வருகிறது. காளி, துர்க்கை போன்ற பெண் தெய்வங்களுக்கும், அருகன், சாத்தன் போன்ற சிறு தெய்வங்களுக்கும் பறையே முதன்மைக் கருவி. பறையிசை, நம் மண்ணின் ஆதி கலை வடிவம். நமக்குள் இருக்கும் குழந்தை தன்மையை, கலைஞனை, பறையிசை தட்டி எழுப்பும். இதில், சாவுக்கு ஒரு தாளம், திருமணத்துக்கு ஒரு தாளம், மாடு பிடிக்கு ஒரு தாளம் என, தனித் தனி தாளங்கள் உள்ளன.

தமிழ் இசையில் இசைக் குறிப்புகள் இருப்பது போல, பறையிசைக்கான இசைக் குறிப்புகளை, பல பறையிசை அமைப்புகள் உருவாக்கி வருகின்றன. தமிழ் மண்ணுக்கான பண்பாட்டை, பாரம்பரியத்தை மீட்டெடுக்க பறையிசையே சிறந்த கருவி. ஏனெனில், அதுதான், போராட்டக் கருவி. ஒருமுறை அதன் சுவையை அனுபவித்தவர்கள், இதை உளமார நேசிக்கத் துவங்கி விடுவர். காரணம், பறையிசையின் ஆதித்தாளம் நம் நரம்புகளில், இன்னும் ரத்தமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதனால் தான், உலகின் எந்த மூலையில் தமிழர்கள் இருந்தாலும், பறையிசை கேட்டவுடன் நாடி நரம்புகளில் கொண்டாட்டம் பரவுகிறது. தமிழர்கள் மட்டுமல்ல, எந்த நாட்டினர் கேட்டாலும், பறையிசை அவர்களை மயக்கி விடும். இசையால் வசமாகா இதயம் எது? பறையிசைக்கு தாளமிடாத கால்கள் எது?

Comments