தமிழ் திரை இசை கலைஞர்களை மாற்றிய தொழில்நுட்பம்

- திவாகர் சுப்பிரமணியம் - (நிறுவனர், ஸ்கூல் ஆப் இண்டியன் பிலிம் மியூசிக்) -
30th Dec, 2014

தமிழ் திரைப் பாடல்களின் தன்மையையும் வடிவத்தையும், நவீன தொழில்நுட்பங்கள் கையாளப்படும் விதங்கள், தீர்மானிக்கின்றன. தொழில்நுட்பங்களின் முன்னேற்றத்திற்கேற்ப, கையாளும் விதங்களும் மாறின.

கையாளும் தன்மை மாற மாற, திரைப் பாடல் சார்ந்த உருவாக்கப் பாத்திரங்கள் (அதாவது, வெவ்வேறு கலைஞர்கள் ஏற்று செயல்படுத்தும் தனித்தனிப் பொறுப்புகள்) உருமாறின. இந்த மாற்றங்களைப் புரிந்து கொள்ள, இது சம்பந்தப்பட்ட குறிப்பிடத்தக்க காரணிகள் என்ன, என்ற கேள்விக்கு நாம் விடை தேடவேண்டியிருக்கிறது. முன்பெல்லாம், இசையமைப்பாளர்களின் அணுகுமுறை, பெரும் பாலும் மனோதர்மத்தை மட்டுமே சார்ந்திருந்தது. அவர்களுக்கு, மெட்டுக்களை அமைப்பது, இசைக் குழுவை இயங்க வைப்பது, போன்ற பொறுப்புகளே பிரதானம்.
இன்றைய இசையமைப்பாளர் களின் அணுகுமுறையோ, மனோதர்மத்தை மட்டுமே சார்ந்தது அல்ல. முதலில் அவர்கள் மனதில் உருவாகும் இசைக் கருக்களை, கணினி தொகுத்தமைப்பு தொழில்நுட்பம் மூலமாக, கணிப்பொறியில் வடிவமைக்கின்றனர்.
வடிவமைக்கப்பட்ட இசையைக் கேட்டு, அதன் பொருத்தத்தை சரிபார்க்கின்றனர். மேலும், கணினி மாதிரி எடுத்தல் தொழில்நுட்பம் மூலம் கிடைக்கப்பெறும் (முன்பே வாசித்துப் பதிவுசெய்யப்பட்ட) இசைக் குறுந்தொகுப்புகளை, உத்வேக மூலக்கருவாகவும் உபயோகப்படுத்துகின்றனர்.
இவ்வித செயல்பாட்டு முறையைக் கையாள்வதன் மூலம், இசை நடத்துனர் மற்றும் இசை நிரலரின் பொறுப்புகளையும், இன்றைய நவீன இசையமைப்பாளர்களே மேற்கொள்கின்றனர். முன்பு, இசையமைப்பாளனின் கவனம், இசையின் தன்மை, இலக்கணம், மற்றும் செயல்திறன் மீது மட்டுமே இருந்தது. இன்றோ அது, இசையின் ஒலிப்புத் தன்மை யின் மீதும், பாடலில் இடம்பெறும் பல்வேறு ஒலிகளின் நவீனத்தின் மீதும் மாறியிருப்பதாக தெரிகிறது.
இவ்வகை மற்றங்கள், கணினி தொழில்நுட்பங்களின் நேரடித் தாக்கத்தின் பிரதிபலிப்பு. கணினி தொழில்நுட்பங்களின் வருகை, மறைமுகமாகவும் இசைக் குழுவினரின் தளங்களை மாற்றி அமைத்திருக்கிறது. இவை அளிக்கும் பலவிதமான நன்மைகளால், ஒரு திரைப்பாடலில் பெரும்பாலான மேற்கத்திய இசைக்கூறுகள், தொகுத்து அமைக்கப்பட்டே தயாரிக்கப்பட்டன.
இதன் விளைவாக, மேற்கத்திய வயலின், வயோலா, பியானோ, செல்லோ, டிரம்ஸ் பொன்ற இசைக் கருவிகளை இயக்கும் கலைஞர்களுக்கு, வேலை தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த தட்டுப்பாட்டைத் தவிர்க்க, கணினி தொழில்நுட்பத்தின் மீது ஈடுபாடு கொண்ட பல இசைக் குழுவினர், விசைப்பலகை அல்லது தாள நிரலர்களாக தங்களை மாற்றி அமைத்துக் கொண்டனர்.
நவீன தொழில்நுட்பங்களை வாங்குவதற்கு முதலீடு செய்ய முடியாத அல்லது செய்ய விருப்ப மில்லாத பலர், திரை இசை தொழிலையே ஒட்டுமொத்தமாக விட்டுவிட்டு, வேறு வகைகளில் வாழ்வை மாற்றியமைத்துக் கொண்டனர். அணுகுமுறை, உருவாக்கப் பாத்திரம், போன்ற இசை சார்ந்த மாற்றங்களை அறிமுகப்படுத்தியது மட்டுமல்லாமல், இசை கலைஞர்களின் சமூக வாழ்வையே, இந்த தொழில்நுட்பம் பாதித்திருக்கிறது. இந்த பாதிப்பு, கணினி தொழில்நுட்பத் தாக்கத்தின் வீச்சில், ஒரு முக்கிய பரிமாணத்தை நமக்கு உணர்த்துகிறது.

Comments