தமிழ் திரைப்பாடலின் தற்போதைய பொருளாதார படிவம்

- திவாகர் சுப்பிரமணியம் - (நிறுவனர், ஸ்கூல் ஆப் இண்டியன் பிலிம் மியூசிக்) -
31st Dec, 2014

ஒரு இசை வடிவம், மக்களை சென்றடைய, அது சம்பந்தப்பட்ட வினியோகக் கூறுகளே வழியமைக்கின்றன. வினியோகக் கூறுகளில் ஏற்படும் மாற்றங்கள், இசையின் வர்த்தகப்படிவத்தை மாற்றியமைக்கிறது. தமிழ் சினிமா பாடல்களுக்கும் இந்த நிலை ஏற்பட்டது.

கடந்த, 1980களில், கடைகளில் வாங்கிய ஒலிப்பேழைகள் மற்றும் ஒலித்தட்டுகள் மூலமாகவே சினிமா பாடல்களைக் கேட்டு ரசித்தோம். எனவே, அப்பொழுது வழக்கத்தில் இருந்த பொருளாதாரப் படிவம், நுகர்வோரை மட்டுமே சார்ந்திருந்தது.
சினிமா படத் தயாரிப்பின் ஆரம்பக் கட்டத்திலேயே, பாடல்கள் இசையமைத்து உருவாக்கப்பட்டன. தயாரான பாடல் தொகுப்பை, இசை வெளியீட்டு நிறுவனங்கள், வாங்கி வெளியிட்டன.
இந்த பரிவர்த்தனையின் மூலம் கிடைக்கும் லாபத்தை, படத் தயாரிப்பாளர்கள், அந்த சினிமா படத் தயாரிப்பிலேயே மீண்டும் முதலீடு செய்தனர். இவ்வாறாக, தமிழ் சினிமா பாடல்கள், தயாரிப்பாளர்களுக்கு நேரடி லாபத்தை தரக்கூடிய வர்த்தகப் பொருள்களாக இருந்தன. நிகழ்கால பொருளாதாரப் படிவமோ, விளம்பரத்தைச் சார்ந்தது.
இணையதளங்கள் அறிமுகமாகிய குறுகிய காலத்திலேயே, பலதரப்பட்ட வலைதளங்கள் மூலம், தமிழ் சினிமா பாடல்கள் கேட்கக் கிடைத்தன. எனவே, சினிமா பாடல்களை கேட்கஒலித்தட்டுகளையோ, ஒலிப்பேழைகளையோ வாங்க வேண்டியதில்லை, என்ற, நிலை உருவாயிற்று. இந்த நிலைமையே, தமிழ் சினிமா பாடல்களின் பொருளாதாரப்படிவத்தின் சமீப மாற்றத்திற்கு நேரடியான காரணம்.
இன்று, சினிமா பாடல்களின் வெளியீடு, ஒரு முக்கிய நிகழ்ச்சி. 'ஆடியோ லாஞ்ச்' அல்லது 'ஆடியோ ரிலீஸ்' என்று அழைக்கப்படும் இந்த நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பப்படுகின்றன. ஒளிபரப்பு உரிமைகளை விற்பனை செய்வதன் மூலம் சினிமா நிறுவனங்கள் லாபம் அடைகின்றன. இந்த விளம்பரம் சார்ந்த படிவம், தமிழ் சினிமா பாடல்களுக்கு பொருளாதார முக்கியத்துவம் அளிக்கிறது.
இணையதளங்களும், கணினி தொழில்நுட்பத்தின் விளைபொருளே. கணினி தொழில்நுட்பம், சினிமா பாடல்களின் பல்வேறு அங்கங்களையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதித்திருக்கிறது. பாடல்களின் இசைத் தன்மை, வடிவம், உருவாக்கப்படும் விதங்கள், பொருளாதாரப் படிவம், கலைஞர்களின் பொறுப்புகள் மற்றும் செயல்திறன், போன்றவை நேரடியாக மாறின. மறைமுகமாக, கலைஞர்களின் திறமை சார்ந்த எல்லைகள், சமூக வாழ்க்கை, பாடல்களின் கலாசார அடையாளம், போன்றவையும் உருமாறின. மாற்றம் எப்பொழுதுமே தடுமாற்றம்தான்.
தமிழர்களாகிய நாம், தடுமாற்றத்தை நிலைப்படுத்தி, சினிமா பாடல்களின் பரிணாம வளர்ச்சியை தினந்தோறும் கொண்டாடுகிறோம். ஆனாலும், தமிழ் சினிமா பாடல், தமிழர்கள் வாழ்விலிருந்து பிரிக்க முடியாத ஒரு முக்கிய கலாசார அங்கமாகவே திகழ்கிறது.
-முடிந்தது.

Comments