கிதாரில் கர்நாடக இசையை தந்த சுகுமார் பிரசாத் எங்கே?

- லலிதாராம் - எழுத்தாளர் -
31st Dec, 2014

கர்நாடக சங்கீதத்தை, கிதாரில் முதன் முதலில் வாசித்தது யார் என்ற கேள்விக்கு, பெரும்பாலோர், 'கிதார் பிரசன்னா' என்று பதிலளிக்கக் கூடும். அந்த தவறான பதிலை திருத்தும் முதல் குரல் பிரசன்னாவுடையதாகத்தான் இருக்கும். ஸ்ரீனிவாஸ், எலெக்டிரிக் மாண்டலினை கர்நாடக சங்கீதத்துக்கு அறிமுகப்படுத்துவதற்கு முன்பாகவே, கிதாரில் பல கச்சேரிகள் செய்தவர், சுகுமார் பிரசாத்.

இணையம் தேடலுக்கும் பகிர்வுக்குமான களமானத்திலிருந்து, சில மாதங்களுக்கு ஒருமுறை, யாரேனும் ஒருவர், சுகுமார் பிரசாத் வாசித்த பஹுதாரி ராகத்தை, அந்த ராகத்தில் இசைத்துள்ள 'ப்ரோவ பரமா' பாடலை கேட்டுவிட்டு பதிவிடுவது வாடிக்கை.
''அவரைப் பற்றி மேலும் தேடினேன். குறிப்பிடும்படியாய் எதுவும் கிடைக்கவில்லை. இன்று அவர் எங்கு இருக்கிறார்? அவர் வாசித்துக் கொண்டிருக்கிறாரா? கச்சேரி பதிவுகள் கேட்கக் கிடைக்குமா?' என்ற ரீதியில் அந்தப் பதிவு இருக்கும்.
இணையத்தின் பல்லாயிர மாயக் கரங்களின் வழிகாட்டலில் அவரை ஒருமுறை நேரில் கேட்டு விடமாட்டோமா என்ற ஏக்கப்பதிவுகள் ஏராளமாய் இணையத்தில் உண்டு.இசைச் சூழலில் வளர்ந்து, சங்கீத கலாநிதி எம்.சந்திரசேகரனிடம் பயின்ற சுகுமார் பிரசாத், மிருதங்கத்திலும் தேர்ச்சியுற்று, பல முன்னணி வித்வான்களுக்கு வாசித்துள்ளார். 1970-களில் கிதாரில் கர்நாடக இசையை வாசிக்க துவங்கினார்.
அவரைக் கேட்டவர்கள்,'துரதிர்ஷ்டவசமாய் அவர் வாசிக்க வந்த காலத்தில், அவருக்கு போதிய உற்சாகம் அளிக்கப்படவில்லை. கிதார் போன்ற கருவியில், கமகங்கள் நிறைந்த கர்நாடக இசையைக் கேட்கும் மனநிலையும் ரசிகர்களுக்கு இல்லை' என்கின்றனர்.
கடந்த, 1980-களில், மாண்டலின் ஸ்ரீனிவாசின் வருகைக்குப் பிறகு அந்த நிலை மாறத் துவங்கியது. 1980-களில் அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும், சுகுமார் பிரசாத்தின் கச்சேரிகள் நடந்துள்ளன. அதன் பின், சுகுமார் பிரசாத் இசை உலகத்திலிருந்து மாயமாய் மறைந்தார். அவர் ஆதிபராசக்தி குழுமத்தில் இணைந்துவிட்டார் என்றும் சில குறிப்புகள் தெரிவிக்கின்றன.
அவர் வாசிப்பைக் கேட்கும்போது அவருக்குள் ஊறி வெளிப்படும் இசை, அவர் வாழ்வு முழுவதும் அவர் ரத்தத்தோடு கலந்துதான் இருக்கும் என்று நினைக்கத் தோன்றுகிறது. அப்படிப்பட்ட கலைஞனின் கரங்கள், இசைக்காமல் இத்தனை ஆண்டுகள் சும்மா இருக்க முடியுமா? அவை இன்றும் இசைக்கின்றன என்றால் அதைக் கேட்க ஏதேனும் வழியுண்டா?
சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நேர்காணலில்,''நான் வாசிக்க வந்த புதிதில் கிருஷ்ண கான சபை போன்ற இடங்களில், அவர் இசையை பெரிதும் விரும்பிச் சென்று கேட்டுள்ளேன். அவர் திரும்பி வர வேண்டும். நிறைய வாசிக்க வேண்டும் என்பது என் ஆசை,'' என்று, மாண்டலின் ஸ்ரீனிவாஸ் கூறியிருந்தார். சுகுமார் பிரசாத் திரும்பி வருவாரா? அவரைக் கேட்கும் பேறு நமக்குக் கிடைக்குமா?
காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

Comments