வாத்திய கருவிகள் தரும் கற்பனைக்கு எல்லை இல்லை!

- டி.இமான், - இசையமைப்பாளர் -
31st Dec, 2014

எனக்கு பல் முளைப்பதற்கு முன்பே, இசையின் அறிமுகம் கிடைத்தது. நான் இசை கற்க வேண்டும் என்பது, அப்பாவின் விருப்பம். அதனால், ஐந்து வயதிலேயே, கீபோர்டு வகுப்புக்கு அனுப்பினார்.

எட்டு ஆண்டுகள், மேற்கத்திய பாரம்பரிய இசை கற்றேன். அப்போதே, இந்திய பாரம்பரிய இசையின் மீது விருப்பம் ஏற்பட்டு, வாய்ப்பாட்டு கலைஞர் மகாலட்சுமியிடம் கர்நாடக இசையும், இந்துஸ்தானி இசைக் கலைஞர் சேகரிடம், இந்துஸ்தானியையும் கற்றேன்.
அதன் பின், டிரம்ஸையும், கிடாரையும் கற்றுக் கொண்டேன். இதெல்லாம், என், 15 வயதுக்குள் நடந்து முடிந்தது. அப்போதிருந்தே, இசையில் ஆர்வத்தை தாண்டி, வெறி ஏற்பட்டது. எப்போதும் இசையோடே இருப்பேன். 9ம் வகுப்பு படித்தபோது, பெரிய இசையமைப்பாளர்களுக்கு 'கீபோர்டு' வாசிக்க வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது. ஆனால், அதற்கு போதிய வசதி எங்களிடம் இல்லை. அப்பா, வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து, 'ரோலண்ட் கீபோர்டு' வாங்கித் தந்தார். எனக்கு இசையில் உள்ள ஆர்வத்தை விடவும், நான் இசையில் மென்மேலும் வளர வேண்டும் என்ற உந்துதல் அப்பாவுக்கு அதிகமாக இருந்தது.
எங்கு சென்றாலும், இசை என் நிழலைப் போலவே தொடர்ந்து வரும். காலையில், பள்ளி முடித்து, மாலையில் இசையமைப்பாளர்களிடம் 'கீபோர்டு' வாசிப்பேன். அதிகாலை வரை, ஒலிப்பதிவு நடக்கும். பின், காலையில் எழுந்து பள்ளிக்கு செல்வேன். ஒருநாள் கூட, எனக்கு சலிப்பு தட்டியதில்லை. காரணம், இசையின் மீது நான் கொண்ட பேரார்வம். இசையை நான் தொழிலாக பார்க்கவில்லை. சுவாசமாகவே பார்க்கிறேன். எனக்கு முதல் திரைப்பட வாய்ப்பு வந்தபோது, வயது, 19. அதற்கு காரணம், இசை.
ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும், பிரச்னைகளே இல்லாதது போன்ற உணர்வை இசையே ஏற்படுத்தும். மன அழுத்தத்தை குறைக்கும். இசைக்கு எல்லை இல்லை. வாத்தியக் கருவிகளின் மூலம் அடையும் கற்பனை, எல்லை இல்லாதது. பெரும் சுமை மனதில் இருக்கும்போது, இசை கேட்க ஆரம்பித்தால், காற்றில் பறந்து வரும் பறவையில் இறகு போல, நம்மை மாற்றி விடும். அது தான், அதன் வல்லமை. இதிலும் பல வகைகள் உண்டு. சிலருக்கு மேற்கத்திய இசை பிடிக்கும். சிலருக்கு இந்திய பாரம்பரிய இசை பிடிக்கும். சிலருக்கு துள்ளலிசை பிடிக்கும். சிலருக்கு, மெல்லிசை பிடிக்கும். அவரவர்களின் விருப்பம், அவரவர்களுக்கானது. ஆனால், எல்லோருக்குமான பிடித்த பொது விஷயமாக இசை இருக்கும்.
மேற்கத்திய பாரம்பரிய இசையில், ஜான் வில்லியம்ஸ், ஹான் சிம்மர் போன்றோர் என் நெஞ்சுக்கு நெருக்கமானவர்கள். இந்திய பாரம்பரிய இசையில், இளையராஜா தான், என் உச்சம். இந்திய இசையில், தமிழகத்துக்கான தனித்துவத்தை அவரே பெற்றுத் தந்தார்.
கர்நாடக இசையில், ஸ்ரீதர் பார்த்தசாரதி, மாண்டலின் ஸ்ரீனிவாஸ், வீணை காயத்ரி ஆகியோர், திரையிசைப் பாடகர்களில், ஸ்ரேயா கோஷல், ஹரிசரண், வத்சலா சீனிவாசன் ஆகியோர் எனக்குப் பிடித்தமானோர். இசையில் ஆர்வம் உள்ள புதியவர்களை அறிமுகப்படுத்துவது, எனக்கு பிடித்த விஷயம். திறமையானவர்களை தேடிக் கொண்டிருக்கிறேன்.

Comments