தவில் உலகின் முடிசூடா மன்னன் பஞ்சாபகேச பிள்ளை

-லலிதாராம்- எழுத்தாளர் -
18th Dec, 2014

கடந்த, 1935-ல், தன் ௩௦வது பிறந்தநாளைக் காண்பதற்கு முன் மறைந்து விட்ட இலுப்பூர் பஞ்சாபகேச பிள்ளையின் பெயர், இன்றளவும் தலைசிறந்த கலைஞர்களின் பட்டியலில் தவறாமல் இடம் பெற்று வருகிறது.

பஞ்சாபகேச பிள்ளை(தவில் வாசிப்பவர்)
'பஞ்சாமி' என்று அழைக்கப்பட்ட பஞ்சாபகேச பிள்ளை, இளவயதில், தன் தாயாரிடம் வாய்ப்பாட்டு கற்று வந்தார். இயற்கையிலேயே, அவருக்கு அமைந்திருந்த லய நிர்ணயத்தை கண்டு, மலைக்கோட்டை வெங்கடாசல தவில்காரரும், 'கோடையிடி' லால்குடி அங்கப்பத் தவில்காரரும் தவில் கற்றுக் கொடுத்தனர். தனது ஏழாம் வயதில், தன் தமையனாரின் நாகஸ்வரத்துக்கு தவில் வாசிக்க ஆரம்பித்த பஞ்சாமி, பதினைந்து வயதாவதற்குள் தவில் உலகின் முடிசூடா மன்னன் என்ற நிலையை அடைந்தார்.

நாகஸ்வர மேதை மதுரை பொன்னுசாமி பிள்ளையுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு, ஐந்து ஆண்டு காலம், அவருடைய மேளக் கச்சேரிகளுக்கு பஞ்சாமி வாசித்தார். பஞ்சாமிக்கு, 22 வயதாகும் போது, மதுரை பொன்னுசாமி பிள்ளை, ராஜரத்தினம் பிள்ளை போன்ற நாகஸ்வர ஜாம்பவான்களுக்கு வாசித்து வந்தார். நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையுடன் சேர்ந்தும் எண்ணற்ற கச்சேரிகள் செய்து வந்தார். லயத்தில் தன்னிகரற்று விளங்கினாலும், அவருக்கு மேடைக் கச்சேரிகளின் மீது காதல் இருந்தது. நல்ல ரவை ஜாதி சாரீரமும், ராக லட்சணங்களில் நல்ல தேர்ச்சியும் பெற்றிருந்தார் பஞ்சாமி.

'நிரவதி ஸுகதா, மரியாதகாதுரா, பலுகவேமி' போன்ற கிருதிகளுக்கு இவர் அமைத்த சிட்டைஸ்வரங்கள், இன்றளவும் மிகப் பிரபலம். ''பஞ்சாமி பிள்ளை இசையில் தோய்ந்த பல பாடல்களை இயற்றியுள்ளார். அவற்றில் பதினொன்று மட்டுமே இன்று கிடைக்கின்றன,'' என்று பி.எம்.சுந்தரம் எழுதியுள்ளார். தட்சிணாமூர்த்தி பிள்ளையின் கஞ்சிரா வாசிப்பில் மயங்கி, தானும் உழைத்து, அந்த வாத்தியத்தில் தேர்ச்சியும் பெற்றார். நாயனா பிள்ளை, செம்மங்குடி சீனிவாச அய்யர், சித்தூர் சுப்ரமண்ய பிள்ளை போன்ற பலரது கச்சேரிகளுக்கு வாசித்துள்ளார்.

''குறைந்த சன்மானம் கிடைத்தபோது பஞ்சாமி என்னுடன் இருந்தார். இன்று ஆயிரக்கணக்கில் சன்மானம் கிடைக்கும் வேளையில் பஞ்சாமி இல்லாமல் போனாரே,'' என்று நாகஸ்வர சக்கரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளை, அடிக்கடி அங்கலாய்ப்பாராம். இலுப்பூர் பஞ்சாமியின் பெயரைச் சொல்ல, அவர் பாடி விட்டுச் சென்ற சில கிராமஃபோன் ரிக்கார்டுகள்தான் இன்று மிஞ்சுகின்றன.

Comments